சரமாரியான கேள்விகள்: பதிலளிக்க முடியாமல் திணறிய உதயநிதி: களோபரமான கிராமசபை கூட்டம்

Webdunia
சனி, 2 பிப்ரவரி 2019 (12:51 IST)
திண்டுக்கல்லில் திமுக சார்பில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்குபெற்ற உதியநிதி ஸ்டாலின் மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் திணறினார்.
திமுக தலைவர் மு க ஸ்டாலின் திமுக சார்பில் தமிழகம் எங்கும் கிராமசபைக் கூட்டங்களை நடத்திப் பங்கேற்று வருகிறார். சென்ற சட்டசபைத் தேர்தலின் போது நமக்கு நாமே சுற்றுப்பயணத்தின் மூலம் மக்களை சந்தித்த ஸ்டாலின் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் கிராமசபைக் கூட்டங்களைக் கையில் எடுத்துள்ளார். மாவட்ட வாரியாக கிராமசபைக் கூட்டங்களில் கலந்துகொண்டு மக்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார். 
 
இந்நிலையில் நேற்று திண்டுக்கல் மாவட்டம், பழைய வத்தலகுண்டில் திமுக சார்பில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலினின் மகன், உதயநிதி ஸ்டாலின் பங்குபெற்றார். இக்கூட்டத்தில் பங்குபெற்ற மக்கள் பலர் உதயநிதியை நோக்கி சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். இத்தனை நாட்கள் எங்கே போனீர்கள். தேர்தல் நேரத்தில் தான் நாங்கள் உங்களின் கண்களுக்கு தெரிவோமா? நீங்கள் இதுவரை மக்களுக்கு என்ன நல்லது செய்தீர்கள் என சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.
 
பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் உதயநிதி திணறினார். விடாத பொதுமக்கள் மாறி மாறி சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். கட்சி நிர்வாகிகளும், உதயநிதியும் செய்வதறியாது திகைத்தனர். இதனால் அந்த பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்