தமிழக காவல்துறை மீது நடவடிக்கை எடுப்பேன்: தினகரன் மிரட்டல்

Webdunia
திங்கள், 11 டிசம்பர் 2017 (14:56 IST)
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியிருக்கும் டிடிவி தினகரன் அதிரடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் நிலையில் நேற்று நள்ளிரவு அவரது ஆதரவாளர்கள் மூன்று பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து புகார் அளிக்க இன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை தினகரன் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், 'எனது ஆதரவாளர்களை காரணமின்றி கைது செய்தது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து புகார் அளித்தேன். ஆர்.கே.நகரில் காவல்துறை ஏவல்துறை போல செயல்படுகிறது. காவல்துறையினர் நேர்மையாக செயல்பட வேண்டும்.  இல்லையெனில் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுப்பேன். இந்த மிரட்டல்களை எல்லாம் நாங்கள் 30 வருடங்களாக பார்த்து வருகிறோம். போலீஸ் அதிகாரிகள் தங்கள் கடமையை மட்டும் செய்ய வேண்டும், மதுசூதனனுக்கு ஓட்டு கேட்பது போல் நடந்து கொள்ள கூடாது' என்று கூறினார்.
 
இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று சாலை மறியல் செய்து போராட்டம் நடத்தியதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்