கடந்த ஏப்ரல் மாதம் அதே தொகுதியில் தினகரன் போட்டியிட்டார். சூறாவளி பிரச்சாரமும் செய்தார். ஆனால் பணப்பட்டுவாடா தொடர்பான புகார் எழுந்ததால் தேர்தல் நிறுத்தப்பட்டது. தற்போது அதே தொகுதியில் தினகரன் மீண்டும் போட்டியிடுகிறார். அதிமுகவின் சின்னமான இரட்டை இலை கைவிட்டுப் போனது. மேலும், தொப்பி, விசில், கிரிக்கெட் மட்டை என அவர் கேட்ட எந்த சின்னமும் அவருக்கு ஒதுக்கப்படவில்லை. எனவே, அவர் தற்போது குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்டு காத்திருந்த அவரை 4 நாட்கள் காத்திருக்க வைத்து அதன்பின்னரே அனுமதி அளித்தது காவல் துறை. தற்போது அவர் ஆ.கே.நகர் தொகுதியில் பிரச்சாரம் செய்து வருகிறார். அவருக்கு பெண்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. அவர் செல்லும் இடமெல்லாம் ‘நாங்க உங்களுக்குதான் ஓட்டு போடுவோம். நீங்க தைரியமா இருங்க’ என ஆண்களும், பெண்களும் கூறுகிறார்களாம். எனக்கு ஓட்டுப்போடுங்கள். அவங்கள மிரட்டியாவது உங்களுக்கு தேவையானத நான் வாங்கி தரேன்னு எனக்கூறியபடி தனது அக்மார்க் புன்னகை முகத்துடன் வலம் வருகிறாராம் தினகரன்.
ஆளும் எடப்பாடி அரசுன் மீதுள்ள அதிருப்தி மற்றும் விஷால் விவகாரத்தில் நடந்து குளறுபடிகள் ஆகியவை ஆர்.கே.நகர் வாசிகள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், அவை தினகரனுக்கு ஓட்டாக மாறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, டிடிவி தினகரனிடம் இரட்டை இலை சார்ப்பில் போட்டியிடும் மதுசூதனன் தோல்வி அடைவார் என பண்பாட்டு மக்கள் தொடர்பகம், லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆர்.கே.நகர் வாசிகளின் ஆதரவு பெருகி வருவது தினகரன் தரப்பிற்கு மகிழ்ச்சியையும்,முதல்வர் எடப்பாடி தரப்பிற்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.