முதல்வரை திடீரென சந்தித்த ரஜினியின் மனைவி: காரணம் என்ன?

Webdunia
வெள்ளி, 8 நவம்பர் 2019 (19:56 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை இன்று ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் அவர்கள் திடீரென சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்தது. இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றும் இதில் அரசியல் எதுவும் இல்லை என்றும் கூறப்படுகின்றது 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த சுஜித் என்ற இரண்டு வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியான நிலையில், குழந்தைகளை காப்பதற்காக ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று லதா ரஜினிகாந்த் விரும்பினார். இதுகுறித்து  அவர் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களிடம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொலைபேசி மூலம் கலந்து ஆலோசித்தார். 
 
தற்போது இதன் அடுத்த கட்டமாக லதா ரஜினிகாந்த் முதல்வரை சந்தித்து உள்ளதாகவும், குழந்தைகளை காப்பதற்கான அமைப்பின் தலைவராக லதா ரஜினிகாந்த் செயல்படுவார் என்றும், இதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளிக்கும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இரு தரப்பில் இருந்தும் இன்னும் வெளியாகவில்லை என்று குறிப்பிடப்பட்டது 
 
ரஜினிகாந்த் இன்று அளித்த பேட்டியில் ’தமிழகத்தில் இன்னும் ஆளுமை இல்லாத தலைவருக்கான வெற்றிடம் இருக்கிறது’ என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் சேர்த்து மறைமுகமாக விமர்சனம் செய்திருந்தார். முதல்வரை அவர் விமர்சனம் செய்த சில மணி நேரங்களில் அவருடைய மனைவி முதல்வரை சந்தித்து இருப்பது தமிழக அரசியல் வட்டாரங்களில் பல்வேறு யூகங்களை எழுப்பியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்