மாநிலங்களைவை உறுப்பினர் பதவிக்கு தமாகாவிற்கு ஒரு சீட் தரப்பட்டுள்ளது குறித்து பல்வேறு விவாதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அதுகுறித்து ஜி.கே.வாசன் பேசியுள்ளார்.
மாநிலங்களவையில் காலியான எம்பி பதவிகளுக்கு அதிமுக சார்பில் மூவரை தேர்ந்தெடுக்க முடியும். தேமுதிக நீண்ட நாட்களாக மாநிலங்களவை எம்.பி சீட் கேட்டு வந்த நிலையில் அதிமுக பொதுக்குழு தமாகாவிற்கு எம்.பி சீட்டை ஒதுக்கியுள்ளது. இதன்மூலம் மாநிலங்களவை எம்.பியாக முதன்முறையாக பாராளுமன்றம் செல்ல இருக்கிறார் தமாகா தலைவர் ஜி.கே.வாசன்.
நீண்ட நாட்களாக தேமுதிக எம்.பி சீட் கேட்டு வந்த நிலையில் அவர்களுக்கு அளிக்காமல் ஜி.கே.வாசனுக்கு அளிக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியது. பாஜகவின் அழுத்தத்தினால்தான் ஜி.கே.வாசனுக்கு சீட் தரப்பட்டது என்றும், ஜி.கே.வாச தனது கட்சியை பாஜகவுடன் இணைக்க போகிறார் என்றும் அரசியல் வட்டாரங்களில் பேச்சு அடிப்பட தொடங்கியது.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேசிய போது இந்த வதந்திகளுக்கு பதிலளித்த ஜி.கே.வாசன் ’அதிமுகவிடம் எம்பி பதவிக்காக முன்பிருந்தே கேட்டு வந்தோம். அதிமுக பொதுக்குழுவின் முடிவு இது. இதற்கும் பாஜகவிற்கும் சம்பந்தம் இல்லை. தமாகா கட்சி பாஜகவுடன் இணைய போவதாக வெளியாகும் செய்திகள் வடிக்கட்டிய பொய் ” என்று தெரிவித்துள்ளார்.