ஆட்சி கலையுமா? 15 அமைச்சர்கள், 35 எம்எல்ஏக்கள் போர்க்கொடி: ஓபிஎஸ் அணிக்கு தாவுகிறார்கள்?

Webdunia
செவ்வாய், 9 மே 2017 (09:28 IST)
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியில் உள்ள 15 அமைச்சர்கள் மற்றும் 35 எம்எல்ஏக்கள் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு வர தயாராக உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள மேட்டூர் தொகுதி எம்எல்ஏ செம்மலை கூறியுள்ளார்.


 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக இரண்டாக பிரிந்தது. ஓபிஎஸ் ஒரு அணியாகவும், சசிகலா ஒரு அணியாகவும் செயல்பட்டனர். பின்னர் சசிகலா சிறைக்கு செல்ல அந்த அணி தினகரன் தலைமையில் இயங்கியது. தற்போது தினகரனும் சிறையில் உள்ளதாலும், அவர் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுகிறார் என அறிவிக்கப்பட்டதாலும் அந்த அணி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் செயல்படுகிறது.
 
இதனையடுத்து இரு அணிகளும் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த இரு தரப்பினரும் குழு அமைத்து சுமூகமாக செல்ல விரும்பினர். ஆனால் பேச்சுவார்த்தை தொடங்கும் முன்னரே ஒரு சில கோரிக்கைகளால் அதில் இழுபறி நீடித்து வருகிறது.
 
இந்நிலையில் தற்போது செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் அணியில் உள்ள மேட்டூர் தொகுதி எம்எல்ஏ செம்மலை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு சுத்தமாக இல்லை.
 
ஆனால் அதே நேரம் எடப்பாடி பழனிச்சாமி அணியில் உள்ள 15 அமைச்சர்கள், 35 எம்எல்ஏக்கள் எங்கள் அணிக்கு வர தயாராக உள்ளார்கள். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
அடுத்த கட்டுரையில்