கோவையில் திமுகவிற்கு ஆதரவாக ரோமானியர் ஒருவர் பிரச்சாரம் செய்து மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தார்.
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இன்றுடன் வாக்குசேகரிப்புக்கான அவகாசம் முடிவடையும் நிலையில் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் தினத்தன்று வாக்குப்பதிவு காலை 7 முதல் மாலை 5 மணி வரையிலும், கொரோனா பாதித்தவர்களுக்கு மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவையில் திமுகவிற்கு ஆதரவாக ரோமானியர் ஒருவர் பிரச்சாரம் செய்து மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தார். தொழில் முறை பயணமாக கோவைக்கு வந்திருந்த ரோமை சேர்ந்த ஸ்டீபன் என்பவர் மாநகர பேருந்தில் பயணித்திருக்கின்றார்.
அப்போது பேருந்தில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்வதை கவனித்து தன் நண்பரிடம் இது தொடர்பாக விசாரித்திருக்கிறார். அப்போது அவர் நண்பர் விளக்கிய பின், பெண்களுக்கு கட்டணமில்லா பயண திட்டம் அவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பின்னர் தனது நண்பர் மூலம் உள்ளூர் திமுகவினரின் தொடர்பை பெற்று அவர்களுடன் இணைந்து புல்லட் வாகனத்திலும், பேருந்திலும் சென்று பொது இடங்களில் திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் இன்று கலந்துக்கொண்டார்.