மழை நின்ற போதிலும் 1000க்கும் மேற்பட்ட கார்கள் பார்க்கிங்.. வேளச்சேரி பாலங்களில் டிராபிக்..!

Siva
வியாழன், 17 அக்டோபர் 2024 (15:04 IST)
கனமழை எச்சரிக்கை காரணமாக, பலர் தங்கள் கார்கள் வேளச்சேரியில் பார்க்கிங் செய்த நிலையில், தற்போது மழை நின்ற பிறகும், புதிய பாலம் மற்றும் பழைய பாலங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்கள் பார்க்கிங் செய்யப்பட்டு இருப்பதாகவும், இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில், கடந்த திங்கட்கிழமை முதல் கார்கள் பார்க்கிங் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், கனமழை எச்சரிக்கையால், கார்களின் பாதுகாப்பிற்காக கார் உரிமையாளர்கள் அவற்றை பார்க்கிங் செய்துள்ளனர்.
வேளச்சேரி 100 அடி சாலையில் உள்ள இரு அடுக்கு புதிய பாலத்தில் சுமார் 600 கார்கள், பழைய பாலத்தில் சுமார் 400 கார்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இரண்டு பாலங்களில் சேர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தப்பட்டுள்ளதால், தரமணி செல்லும் 100 அடி சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மழை நின்று நான்கு நாட்களாக இங்கு கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது, ஓரளவுக்கு கார் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், இன்னும் பல கார்கள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அடுத்த மழைக்கும் இந்த பாலத்திலேயே கார்கள் நிறுத்தப்பட்டால், காவல்துறை அபராதம் விதிக்க கூடாது என கார் உரிமையாளர்கள் கோருகின்றனர்.

இந்த நிலையில், கார்களின் பாதுகாப்பிற்கு தகுந்த முன்னேற்பாடுகளை அரசு செய்ய வேண்டும் என்றும், பாலத்தில் கார்கள் நிறுத்தப்படுவதை அனுமதிக்க கூடாது என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்