நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை கடந்த ஆண்டு ஆரம்பித்த நிலையில், அதன் பின்னர் விக்கிரவாண்டியில் ஒரு மாபெரும் மாநாடு நடத்தப்பட்டது என்பது தெரிந்தது.
இந்த நிலையில், 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை சந்திக்கும் வகையில் இந்த கட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல் கட்டமாக, மாவட்ட செயலாளர்கள் நியமனம் நடைபெற உள்ளது. அதற்காக, இன்று பணி இன்று பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், சற்று முன் இந்த கூட்டம் கூடிய நிலையில், விஜய் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தற்போது படப்பிடிப்பில் இருப்பதால், கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை என்றும், இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு விஜய் ஒப்புதல் அளித்தவுடன் விரைவில் மாவட்ட செயலாளர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும், தமிழக வெற்றி கழகத்தின் வட்டாரங்கள் கூறுகின்றன.