பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையிலிருந்து ஏராளமானோர் தென் மாவட்டங்கள் உட்பட சொந்த ஊருக்கு செல்லும் நிலையில், சொந்த வாகனங்களில் வெளியூர் செல்பவர்கள் நகரத்திற்குள் வராமல் புறவழி சாலைகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பில், சொந்த வாகனத்தில் வெளியூர் செல்பவர்கள் வழக்கமாக பயன்படுத்தும் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக ஜிஎஸ்டி சாலையில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், அதற்குப் பதிலாக திருப்போரூர், செங்கல்பட்டு அல்லது வண்டலூர் புறவழிச்சாலை வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெருங்களத்தூர் அருகே ரயில்வே பால வேலைகள் நடைபெற்று வருவதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும் எனவும், தற்போது பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஏராளமான வாகனங்கள் செல்வதால் டிராபிக் அதிகமாக ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, புறவழிச்சாலையை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், மதுரவாயல் புறவழிச்சாலை மூலம் வெளியேறுவதையும் தவிர்க்கலாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.