பிளஸ் 2 விடைத்தாள் நகலை எப்போது பதிவிறக்கம் செய்யலாம்? முக்கிய அறிவிப்பு..!

Siva
செவ்வாய், 28 மே 2024 (13:09 IST)
பிளஸ் 2  பொதுத் தேர்வு எழுதிய மாணவ மாணவிகள் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்திருந்த நிலையில் விண்ணப்பம் செய்த மாணவர்கள் இன்று முதல் இணையதளத்தில் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 
 
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே 6-ஆம் தேதி வெளியானது. இதையடுத்து விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்களின் விடைத்தாள் நகலினை
செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
 
விடைத் தாள்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இணையதள முகவரியில் தலைப்பினை 'க்ளிக்' செய்து வெற்று விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
 
தேர்வர்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, அதனை மே 29 புதன்கிழமை பிற்பகல்1 மணி முதல் ஜூன் 1 வரையிலான நாள்களில் மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். அங்கேயே மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டுக்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
 
தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பப் படிவத்தை ஒப்படைக்க வேண்டும்.
 
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்