பேச்சுவார்த்தை நடத்த இறங்கி வந்த டிரம்ப்.. நிபந்தனை விதித்த சீனா.. மீண்டும் வர்த்தக போரா?

Siva

ஞாயிறு, 20 ஏப்ரல் 2025 (16:12 IST)
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவும் வரி விதிப்பு மோதல் உலக அளவில் அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகவே இருக்கிறது.

இந்த நிலையில், "பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளோம்" என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அனுப்பிய செய்தியை, சற்று தயங்கிய நிலையில்  இறுதியில் சீனா ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் "நாங்கள் பேச்சுவார்த்தைக்கு  தயாராக இருக்கிறோம். ஆனால் சீனாவை சமமான இடத்தில் வைத்தே மரியாதையுடன் அணுக வேண்டும்" என நிபந்தனை விதித்துள்ளது.

இந்நிலையில், நேற்று வெள்ளை மாளிகையில் இத்தாலி பிரதமர் மெலோனி ட்ரம்பை நேரில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், "சீனாவுடன் விரைவில் ஒரு முக்கிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும். இதற்கான ஆலோசனைகள் தற்போது நடந்து வருகின்றன" என்று தெரிவித்துள்ளார். மேலும், "சீனா பலமுறை நம்மை பேச்சுவார்த்தைக்காக அணுகியுள்ளது" என்றும் அவர் கூறினார்.

அமெரிக்காவின் வரிவிதிப்பால், அதன் நெருங்கிய கூட்டாளிகள் சீனாவுடன் நெருக்கம் கொள்ள முயல்கிறார்கள் என்ற கேள்விக்கு ட்ரம்ப், "அதற்கெல்லாம் நான் கவலைப்படவில்லை. ஏனெனில், எந்த நாடும் அமெரிக்காவுடன் போட்டியிட முடியாது" என்று பதிலளித்தார்.

"சீனா மட்டுமல்ல, பல்வேறு நாடுகள் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்வதில் ஆர்வமாக இருக்கின்றன. சீனாவுடன் ஒரு நல்ல உடன்படிக்கை விரைவில் அமையும்" எனவும் அவர் நம்பிக்கையுடன் கூறினார்.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்