கடந்த சில காலமாக நாம் தமிழர் கட்சியினர் பலர் கட்சியிலிருந்து விலகி வேறு கட்சிகளில் சேர்ந்து வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரை இயக்குனர் சீமான் தொடங்கிய நாம் தமிழர் கட்சியில் ஏராளமான உறுப்பினர்கள் உள்ள நிலையில், கடந்த பல சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களில் தனித்து போட்டியிட்டு வாக்கு சதவீதத்தில் பல தொகுதிகளில் மூன்றாவது பெரிய கட்சியாகவும் உள்ளது. ஆனால் சமீபமாக நா.த.கவில் இருந்து பல முக்கிய நிர்வாகிகளும் வெளியேறி வருவது தொடர்கதையாகி வருகிறது.
சீமான் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், தங்களது கருத்துகளை ஏற்றுக் கொள்வதில்லை என்றும் கட்சியிலிருந்து விலகுபவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் நிர்வாகிகள் விலகும்போது அவர்களை பின் தொடர்பவர்களும் கட்சியிலிருந்து விலகி மொத்தமாக வேறு கட்சிகளில் இணைகின்றனர்.
சமீபத்தில் நாகப்பட்டிணத்தில் நா.த.கவினர் பலர் கட்சியை விட்டு விலகி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். தொடர்ந்து கோவை, நாமக்கல் மாவட்டங்களிலும் நா.த.கவினர் கூட்டமாக கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.
அதை தொடர்ந்து தற்போது திருநெல்வேலியிலும் நெல்லை மாவட்ட நா.த.க மாவட்ட செயலாளர் கண்ணன் மற்றும் அவரது 100க்கும் மேற்பட்ட பின் தொடர்பவர்கள் நா.த.கவிலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளனர். இந்த நிகழ்வில் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து பல மாவட்டங்களில் நாதகவினர் கட்சி விலகி வருவதால் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் நாதகவின் வாக்கு வங்கி பாதிக்கப்படலாம் என்று பேசிக் கொள்ளப்படுகிறது.
Edit by Prasanth.K