போலீஸுக்கு பால் கட்: முடிவை வாபஸ் வாங்கிய பால் முகவர்கள் சங்கம்!

Webdunia
சனி, 27 ஜூன் 2020 (08:59 IST)
காவலர்கள் வீடுகள் மற்றும் குடியிருப்புகளுக்கு நாளை முதல் பால் சப்ளை கிடையாது என்ற முடிவை தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் திரும்பப்பெற்றுள்ளது.
 
கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், ஊரடங்கை மக்கள் சரியாக பின்பற்ற அனைத்து இடங்களில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 
 
ஊரடங்கை மீறி வெளியே சுற்றுபவர்களை போலீஸார் தண்டிக்கும் அதே சமயம், எந்த தவறும் செய்யாத சாதாரண வியாபாரிகளும், மக்களும் கூட போலீசாரின் நடவடிக்கையில் பாதிக்கப்படுகின்றனர்.
 
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மக்களுக்கு அத்தியாவசிய தேவையான பாலை கொண்டு செல்லும் முகவர்களை காவல்துறையினர் தொடர்ந்து இடையூறு செய்து வருவதாகவும், வாகனங்களை பறிமுதல் செய்து கொள்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 
 
இதுதவிர பால் விற்பனையகங்களையும் மூட சொல்லி அடிக்கடி போலீஸார் மிரட்டுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். போலீஸாரின் இந்த செயலை கண்டித்து தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் நூதனமான போராட்டத்தை அறிவித்தது. 
 
அதன்படி நாளை முதல் காவல்துறையினர் வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு பால் சப்ளை செய்யப்படாது என தெரிவித்தனர். அதன் பின்னர் தொலைப்பேசி மூலம் நடந்த பல கட்ட பேச்சுவார்த்தைகள் இந்த முடிவை கைவிட வைத்துள்ளது. 
 
ஆம், சுமூக தீர்வு எட்டப்பட்டதால் காவல்துறையினருக்கு பால் விநியோகம் செய்ய மறுக்கும் முடிவு கைவிடப்படுகிறது என பால் முகவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்