நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள் பலரும் அரசுக்கு கண்டனங்களும் அனிதாவின் மரணத்திற்கு வருத்தத்தையும் பதிவு செய்து வருகின்றனர்.
இதனையடுத்து தமிழகத்தின் சில இடங்களில் மாணவி அனிதாவின் தற்கொலைக்கு எதிராக அரசை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மாணவின் தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்துள்ளார்.
அரசியல் குறித்து சில ஆலோசனைகள் பெற கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்த நடிகர் கமல்ஹாசனை செய்தியாளர்கள் சற்றுமுன் சந்தித்தனர். அப்போது மாணவி அனிதாவின் தற்கொலை குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கருத்து கேட்டனர்.
அப்போது பேசிய நடிகர் கமல், மாணவி அனிதாவின் தற்கொலை மிகுந்த வேதனை அளிக்கிறது. நல்ல ஒரு மருத்துவரை நாம் இழந்துவிட்டோம். வரும் காலங்களில் இதுபோன்ற துயரங்கள் நிகழக்கூடாது. மாணவி அனிதாவின் தற்கொலைக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். கனவோடு வாழ்ந்த அனிதாவை மண்ணோடு புதைத்து விட்டனர். திருமாவளவன் உள்ளிட்டோர் வெகுண்டு எழ வேண்டும் என கூறினார்.