தமிழ்நாட்டில் பல பகுதிகளில் 10 ரூபாய் நாணயங்களை பல கடைகளில் வாங்க மறுத்து வரும் நிலையில் கள்ளக்குறிச்சி கலெக்டர் அதிரடி எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இந்தியாவில் 2016ல் பணமதிப்பிழப்பு கொண்டுவரப்பட்ட காலத்தில் புதிய பணத்தாள்கள் வெளியிடப்பட்டன. அப்போது 10 ரூபாய் மதிப்புள்ள நாணயங்களும் வெளியிடப்பட்டன. அப்போது யாரோ அவை போலி என வதந்தியை பரப்பிவிட்ட நிலையில் 8 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் பல ஊர்களில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாக்காசாகவே இருந்து வருகின்றன.
அப்படியாக 10 ரூபாய் நாணயங்களையே இன்னும் மக்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ளாத நிலையில் தற்போது 20 ரூபாய் நாணயங்களும் புழக்கத்திற்கு வந்துள்ளது. ஆனால் சில ஊர்களில் இந்த நாணயங்களை கண்டாலே ஏதோ தடை செய்யப்பட்ட பொருள் போல கொடுக்கல், வாங்கலுக்கு பயன்படுத்தாமல் இருந்து வருகின்றனர். அப்படியாக கள்ளக்குறிச்சியிலும் பல கடைகளில் 10 ரூபாய், 20 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதுகுறித்து அரசு ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்ட பிறகும் மக்களிடையே இந்த பழக்கம் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் கள்ளக்குறிச்சியில் உள்ள கடைகளில் 10 ரூபாய், 20 ரூபாய் நாணயங்களை பெற மறுத்தால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளார். அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்டு வழங்கப்படும் பணம், நாணயத்தை வர்த்தகத்திற்கு பயன்படுத்த மறுப்பது தொடர்ந்து பல ஊர்களிலும் பிரச்சினையாகவே இருந்து வருகிறது.