சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் அவரது ராஜினாமாவை ஏற்று கொண்டதாக கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்த 2023 ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 19-வது முறையாக நீட்டிக்கப்பட்டது. 230 நாட்களுக்கும் மேலாக சென்னை புழல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக பதவி வகித்து வந்தார்.
இதனிடையே செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், கடை நிலை ஊழியர் ஒருவர், 48 மணி நேரம் சிறையில் இருந்தால் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுவார். ஆனால், 230 நாட்களுக்கு மேல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜி இன்னும் அமைச்சராக நீடிக்க அனுமதிப்பதன் மூலம் மக்களுக்கு என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள் என கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில் தனது அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்துள்ள நிலையில் அவரது ராஜினாமாவை முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆளுநரின் பரிந்துரைக்கு அனுப்பி வைத்தததாகவும், ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.