நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்பட மூன்று பேருக்கு ஜாமின் வழங்கி கரூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கரூர் மாவட்டம் காட்டூரை சார்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்களை வைத்து வாங்கியதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் தலைமறைவானார்.
கடந்த 16ஆம் தேதி கேரளாவில் வைத்து சிபிசிஐடி போலீசார் அவரை கைது செய்து, கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்த விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் 2 நாட்கள் காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பில் ஜாமீன் கோரி கரூர் குற்றவியல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் முன்னிலையில் நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபத, எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
காலை, மாலை என இருவேளைகளிலும் சிபிசிஐடி அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் மதியம் வாங்கல் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
மறு உத்தரவு வரும் வரை இது தொடர வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இதே வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் பிரித்திவிராஜுக்கும் காவல் வழங்கப்பட்டுள்ளது.