3 வருடங்களுக்கு முன் டிரம்ப் ஃபேஸ்புக் கணக்கை முடக்கிய மார்க்.. இன்று திடீர் சந்திப்பு..!

Mahendran

வியாழன், 28 நவம்பர் 2024 (15:57 IST)
மூன்று வருடங்களுக்கு முன்பு டொனால்ட் டிரம்ப் பேஸ்புக் கணக்கை மார்க் ஸூகர்பெர்க் முடக்கிய நிலையில், இன்று அவரை சந்தித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற வன்முறையை தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டது. ஆனால் மீண்டும் 2023ஆம் ஆண்டு அவரது கணக்கு செயல்பாடு தொடங்கியது.

இந்த நிலையில், டொனால்ட் டிரம்ப் வரும் ஜனவரி மாதம் பதவியேற்க உள்ள நிலையில், அவரது நெருங்கிய நண்பராக இருக்கும் எக்ஸ் என்ற சமூக வலைதளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் உள்ளார். இந்த நிலையில் பேஸ்புக் சமூக வலைதளத்தின் உரிமையாளர் மார்க் ஸூகர்பெர்க் அவரை சந்தித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக டிரம்ப் விரைவில் பதவியேற்க உள்ள நிலையில், அனைத்து தொழில் நிறுவன தலைவர்களையும் சமூக வலைதள உரிமையாளர்களையும் அவர் சந்தித்து வருகிறார். அந்த வகையில், நேற்று இரவு உணவு விருந்தில் பங்கேற்க, மார்க் ஸூகர்பெர்க்கிற்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அதன்படி இந்த சந்திப்பு நடந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது சில முக்கிய பேச்சுவார்த்தைகள் நடந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில், மார்க் எந்த ஒரு அதிபர் வேட்பாளரையும் ஆதரிக்கவில்லை. ஆனால் அதே நேரத்தில், டிரம்ப் மீது நடைபெற்ற கொலை முயற்சி தாக்குதலுக்கு அவர் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Edited by Mahendran


வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்