காவலர் ஒருவர் ஹெல்மெட் அணியாத விவகாரத்தில் அவருக்கு ஆதரவாக ஆடியோ வெளியிட்ட பெண் காவலர் ஒருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இருசக்கரம் வாகனம் ஓட்டுவோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அவ்வப்போது மாநில அரசுக்கு அறிவுறுத்திக்கொண்டே உள்ளது. இந்நிலையில் தற்போது சென்னையில் கண்காணிப்புக் கேமராக்களை போலீஸார் பொருத்தியுள்ளனர். இதில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடும் மக்களின் வீட்டுக்கே சம்மன் அனுப்பும் திட்டத்தையும் துவங்கியுள்ளனர். இந்நிலையில் காவல்துறை அதிகாரிகளும் கட்டாயமாக ஹெல்மெட் அணியாவிட்டாலும் தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
சென்னை போக்குவரத்து காவல் துறையால் gctp எனப்படும் காவலர் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பான புகாரை அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த செயலின் மூலம் பெறப்பட்ட புகாரை அடுத்து மேற்கு மாம்பலம் காவல் நிலைய சட்ட ஒழுங்கு உதவி ஆய்வாளர் மதன்குமார் இணை ஆணையர் மகேஸ்வரி சஸ்பெண்ட் செய்துள்ளார்.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட, சஸ்பெண்ட் ஆன போலிஸுக்கு ஆதரவாக பெண் காவலர் ஒருவர் குரலில் ஆடியோ ஒன்று வெளியானது. அந்த ஆடியோவில் இந்த வீடியோவை எடுத்த ஜட்ஜை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்தார். வக்கீல்கள் இதுபோல் ஹெல்மெட் போடாமல் போனால் நடவடிக்கை எடுப்பீர்களா எனக் கேள்வி எழுப்பினார். அவரது இந்த வீடியோ வைரலாக அவர் யார் என்பதைக் கண்டுபிடிக்க முயன்ற போலிஸார் அஷோக் நகர் காவல் நிலைய பெண் தலைமைக் காவலர் பெர்சியல் அனிதா ஜீவாம்மா என்பதைக் கண்டுபிடித்து அவரையும் தற்காலிகப் பணிநீக்கம் செய்துள்ளனர்.