கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவி பணத்தை திருடியதாக குற்றம் சாட்டியதில் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் திருவண்ணாமலையை சேர்ந்த இளம்பெண் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். அங்குள்ள விடுதியிலேயே அவர் தங்கி படித்து வந்துள்ளார். சமீபத்தில் மாணவி படித்து வந்த கல்லூரியில் 1500 ரூபாய் பணம் காணமல் போனதாக தெரிகிறது.
அதை மாணவிதான் எடுத்திருப்பார் என்று சந்தேகப்பட்ட கல்லூரி பேராசிரியர்கள் அவரை கல்லூரி முதல்வரிடம் அழைத்துச் சென்றுள்ளனர். மதியம் 1 மணிக்கு அவரை விசாரிக்கத் தொடங்கிய நிலையில் இரவு 7 மணிக்குதான் அவரை வெளியே விட்டுள்ளனர் என்பது சக மாணவர்கள் கூறியதன் மூலம் தெரிய வருகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான மாணவி மருத்துவமனையின் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். முதலில் தனியார் மருத்துவமனையிலேயே மாணவியை வைத்து மருத்துவம் பார்த்தவர்கள் மாணவர்களை அழைத்து ரத்தம் கேட்டுள்ளனர். பின்னர் மாணவி கோவை அரசு மருத்துவக் கல்லூரி கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தனியார் கல்லூரி மற்றும் அதன் பேராசிரியர்கள், முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சக மாணவர்களும், இறந்த மாணவியின் பெற்றோரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Edit by Prasanth.K