தேர்தல் முடிவுக்கு பின் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் புதிய திமுக ஒன்றும், அண்ணா-கருணாநிதி ஆதரவாளர்கள் தலைமையில் ஒரு திமுக என்றும், திமுக இரண்டாக உடையும் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இன்று மாலையுடன் நான்கு தொகுதிகள் சட்டப்பேரவை தேர்தலின் பிரச்சாரம் முடிவுக்கு வந்த நிலையில் பிரச்சாரத்தை முடித்த பின்னர் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது வரும் 23ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது அதிமுக அனைத்து தொகுதிகளிலும் முன்னிலை என்ற செய்தி வெளிவரபோகின்றது. அப்போது திமுக இரண்டாக உடையும். உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஒரு அணியும் அண்ணா-கருணாநிதி ஆதரவாளர்கள் ஒரு அணியும் என இரண்டாக திமுக உடையும் என்றும் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.
ஏற்கனவே உதயநிதி ஸ்டாலினை கட்சி தலைமை முன்னிலைப்படுத்தி வருவதால் சில மூத்த திமுக தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் ஸ்டாலின் தலைமையில் ஒரே திமுக தான் இருக்கும் என்றும் கட்சி என்றைக்கும் உடைய வாய்ப்பு இல்லை என்றும் திமுகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.