சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு? – அமைச்சர் சேகர்பாபு அதிரடி!

Webdunia
ஞாயிறு, 31 டிசம்பர் 2023 (13:11 IST)
சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீது ஏறுவது குறித்து தீட்சிதர்கள், அதிகாரிகள் இடையே மீண்டும் மோதல் எழுந்த நிலையில் இதுகுறித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.



சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய அறநிலையத்துறை அனுமதித்திருந்த நிலையில், கனகசபை மீது ஏற அனுமதி இல்லை என தீட்சிதர்கள் போர்டு வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த போர்டை அதிகாரிகள் அப்புறப்படுத்தியதால் தீட்சிதர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் இடையே மோதல் எழுந்தது.

இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்த நிலையில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் கனகசபையில் நுழைய அனுமதி மறுத்து தீட்சிதர்கள் பிரச்சினை செய்ததால் அறநிலையத்துறை அதிகாரிகளுடன் மீண்டும் வாக்குவாதம், மோதல் எழுந்துள்ளது.

சிதம்பரம் கோவில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அனுமதி மறுத்தது தொடர்பாக தொடர்புடையவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர உள்ளதாகவும், அதில் சிதம்பரம் நடராஜர் கோவில் கண்டறிந்த 30க்கும் அதிகமான விதிமீறல்களையும் நீதிமன்றத்தில் தெரிவிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார். தீட்சிதர்கள் – அறநிலையத்துறை இடையேயான இந்த மோதலால் சிதம்பரம் கோவிலில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்