பெட்ரோல் டீசல் விலையை ஜி எஸ் டி-க்குள் கொண்டு வர மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக பாஜக வின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தகவல் தெரிவித்துள்ளார்
நாடு முழுவதும் ஒரே வரி என்ற சரக்கு மற்றும் சேவை வரியை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை மட்டும் இந்த ஜி எஸ் டி –க்குள் வராமல் விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது.
தற்போது நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர். இதனால் பெட்ரோல் டீசல் விலையைக் கட்டுக்குள் கொண்டுவர அவற்றை ஜி எஸ் டி-க்குள் கொண்டுவர வேண்டும் என நாடு முழவதும் குரல்கள் எழுந்தன.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை ‘உயர்ந்து வரும் பெட்ரோல் விலை கவனத்தை ஈர்த்துள்ளது. அதைக் குறைப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியுமென விவாதிக்கப்பட்டு வருகிறது. வேகமான தாங்க முடியாத விலையுயர்வு எதனால் வருகிறது என்றால் இதற்கு முன்னால் ஆண்டவர்கள் எந்த தொலைநோக்கு திட்டமும் கொண்டுவரவில்லை என்பதனால்தான். பெட்ரோல் டிசலை ஜி எஸ் டி –க்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் அதே நேரத்தில் மற்ற மாநில அரசுகளைப் போல தமிழக அரசும் வாட் வரியைக் குறைக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.