அடுத்த பாஜக தமிழக தலைவர் யார்? கூட்டணி யாருடன்? விடிய விடிய ஆலோசனை செய்த அமித்ஷா..!

Siva

வெள்ளி, 11 ஏப்ரல் 2025 (08:23 IST)
மத்திய உள்துறை அமைச்சர் நேற்று இரவு சென்னை வந்த நிலையில், விடிய விடிய அவர் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசித்ததாகவும், அடுத்த பாஜக தலைவர் யார்? 2026 ஆம் ஆண்டு தேர்தலில் எந்தெந்த கட்சியுடன் கூட்டணி என்பதைப் பற்றியும் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இரண்டு நாள் பயணமாக நேற்று சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா, கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினார். அதைத் தொடர்ந்து, விடிய விடிய அவர் நிர்வாகிகளை சந்தித்ததாகவும், முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனை அடுத்து, இன்று காலை 10 மணி முதல் பல்வேறு அரசியல் கட்சிகளை சந்திக்க இருப்பதாகவும், குறிப்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது பாஜக-அதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில், அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பி.எஸ் ஆகியவர்களை சந்திக்கும் திட்டம் இல்லை என்றும், இப்போதைக்கு கூட்டணி கட்சிகளை மட்டும் உறுதி செய்துவிட்டு அதன் பின் பிரிந்தவர்களை சேர்க்கும் முயற்சி எடுக்கலாம் என்று அமித்ஷா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து, இன்று மதியம் 12 மணிக்கு செய்தியாளர்களை அமித்ஷா சந்திக்க இருப்பதாகவும், அப்போது அவர் அதிமுகவுடன் கூட்டணி என்ற தகவலை வெளியிடுவார் என்றும் கூறப்படுகிறது.

அதே போல், தமிழக பாஜக தலைவர் யார் என்பதையும் முடிவு செய்துவிட்டு தான் அமித்ஷா டெல்லி செல்வார் என்றும் கூறப்பட்டு வருவது, பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்