தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் சாதி பெயரை பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் கருத்து தெரிவித்துள்ளார்.
கல்வராயன் மலை பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையிலும் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, கல்வராயன் மலை பகுதி தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்தது. மலைப்பகுதிகளில் 150 பள்ளிகளில் இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அங்கு அடிப்படை வசதிகள் முழுமையாக உள்ளதா? என நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் கேள்வி எழுப்பினார். தெருக்களில் உள்ள சாதி பெயரை மாற்றியது போல அரசு பள்ளிகளில் உள்ள சாதி பெயரையும் நீக்கி விடுங்கள் என்று நீதிபதி அறிவுரை வழங்கினார்.
மேலும் மக்கள் வரிப்பணத்தில் நடத்தும் அரசு பள்ளிகளில் சாதி பெயர் இருக்கலாமா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.