திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

Mahendran

திங்கள், 7 ஜூலை 2025 (18:16 IST)
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழிக்கு அருகிலுள்ள திருவெண்காடு கிராமத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க பிரம்ம வித்யாம்பிகை உடனுறை சுவேதாரண்யேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. 
 
விநாயகர், முருகன், நடராஜர், சுவேத மகாகாளி, சவுபாக்கிய துர்க்கை உள்ளிட்ட பல்வேறு தெய்வங்களுக்கும் இங்கு சன்னதிகள் அமைந்துள்ளன. மேலும், சந்திரன், சூரியன், அக்னி ஆகிய பெயர்களில் மூன்று திருக்குளங்களும் இக்கோவிலின் தனிச்சிறப்பு. இத்தகைய புண்ணியத் தலத்தில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, கடந்த சில மாதங்களாகப் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது அனைத்துப் பணிகளும் நிறைவடைந்த நிலையில், இன்று காலை கும்பாபிஷேக பெருவிழா கோலாகலமாக அரங்கேறியது.
 
இன்று காலை 8 ஆம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்று, பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர், யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கடங்கள் மேளதாளங்கள் முழங்க கோவிலைச் சுற்றி வலம் வந்தன. சரியாக காலை 5.30 மணிக்கு, கோவிலில் உள்ள அனைத்துப் பரிவார சன்னதி விமான கோபுர கலசங்களிலும் புனிதநீர் ஊற்றப்பட்டு, பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
 
இந்த விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், சுதா எம்.பி., பன்னீர்செல்வம், நிவேதா முருகன், ராஜகுமார் எம்.எல்.ஏ.க்கள், தமிழ் சங்கத் தலைவர் மார்கோனி இமயவரம்பன், தி.மு.க. பிரமுகர் முத்து. தேவேந்திரன், மாருதி பில்டர்ஸ் அகோரம் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு 'ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய...' என்ற பக்தி கோஷம் முழங்க தரிசனம் செய்தனர். முடிவில், பக்தர்கள் மீது ட்ரோன் மூலம் புனிதநீர் தெளிக்கப்பட்டது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்