நேற்று இரவு மும்பை அருகே ஒரு பாகிஸ்தான் படகு இந்திய எல்லைக்குள் திடீரென நுழைந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியக் கடற்படை உடனடியாக ரேடார் மூலம் அதனை கண்டறிந்து, முப்படைகளுக்கும் தகவல் கொடுத்தது. இதனை அடுத்து, அந்த படகு தேடப்பட்ட நிலையில், திடீரென மாயம் ஆகிவிட்டது.
கடல் சீற்றம், பலத்த காற்று, மழை போன்ற காரணங்களால் பாகிஸ்தான் படகு இந்திய எல்லைக்குள் வந்திருக்கலாம் என்று கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், அந்த படகில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் இருக்கலாம் என்று கூறப்பட்டதால், உடனடியாக ஹெலிகாப்டர்கள் மூலம் தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது. தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பையில் தொடர் தாக்குதல்கள் நடந்தபோது, தீவிரவாதிகள் இரவோடு இரவாக படகில் தான் மும்பைக்குள் நுழைந்தனர். இந்த முன்னுதாரணத்தால், தற்போதைய தேடுதல் வேட்டை மிக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.