தனியார் நிறுவனங்களில் 80 விழுக்காடு வேலைவாய்ப்பு தமிழருக்கே - சீமான் அறிக்கை

Webdunia
புதன், 12 அக்டோபர் 2022 (19:03 IST)
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,'' தனியார் நிறுவனங்களில் 80 விழுக்காடு வேலைவாய்ப்பினை தமிழருக்கே வழங்க தமிழ்நாடு அரசு உடனடியாகத் தனிச்சட்டம் இயற்ற வேண்டும்!'' எனத் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியில் சிக்கி வறுமையில் வாடும் நிலைக்கு தமிழர்கள் தள்ளப்படுகின்றனர். ஆனால், தற்போது அந்தப் பணிகளிலும் தமிழர் அல்லாத வடவர்களையே முழுக்க முழுக்க தனியார் நிறுவனங்கள் பணியமர்த்தும்போக்கு அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக மேற்கு மாவட்டங்களில் கடந்த சில ஆண்டுகளில் வேலைவாய்ப்புகளுக்காகக் குடியேறிய வடவர்களின் எண்ணிக்கை மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமாகும். சென்னை, கோவை உள்ளிட்ட மாநகரங்கள், திருப்பூர், ஓசூர் உள்ளிட்ட தொழில் நகரங்கள் மட்டுமின்றித் தமிழ்நாட்டின் கிராமங்கள் வரை வடவர்களையே பணியமர்த்தும்போக்கு அதிகரித்து வருகிறது.

அவ்வாறு தமிழ்நாட்டிற்கு வரும் பிறமாநிலத்தவர் விரைவாகக் குடும்ப அட்டை, இருப்பிடச்சான்று பெற்று நிரந்தரமாகக் குடியேறுகின்றனர். மேலும், வாக்காளர் அட்டையும் பெறுவதால் தமிழ்நாட்டின் அரசியலைத் தீர்மானிக்கும் ஆற்றலாகவும் வடவர்கள் உருவெடுத்து வருகின்றனர்.

இதனால் தமிழர்களின் வேலைவாய்ப்பு, பொருளாதாரம் யாவும் பறிக்கப்படுவதோடு மட்டுமின்றி எஞ்சியுள்ள அரசியல் அதிகாரத்தையும் வடவர்களிடம் முற்றாக இழந்து, தமிழர்கள் தங்கள் சொந்த நிலத்திலேயே உடைமைகள், உரிமைகளற்ற அகதிகளாக, அடிமைகளாக வாழும்
அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் தமிழ்நாட்டில் குடியேறும் வடவர்களால் நாளுக்குநாள் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடுங்குற்றச் செயல்களும் அதிகரித்து அதனால் சட்டம் ஒழுங்கும் மிகமோசமான நிலையை எட்டியுள்ளது. அதுமட்டுமின்றி, உழைப்புக்கேற்ற குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் என்பதையும் தகர்த்து, மிகக்குறைந்த ஊதியத்திற்கு வடவர்கள் பணிபுரிய முன்வருவதால் தமிழகத் தொழிலாளர்கள் போராடிப்பெற்ற உரிமையும் பறிபோய் வர்க்கப்பாகுபாட்டில் 20 ஆண்டுகள் தமிழ்நாடு பின்னோக்கி செல்லும் இழிநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இந்தி மொழி ஆதிக்கத்தைத் தீவிரமாக எதிர்க்கும் வீரமிகுந்த தமிழ்மண், திட்டமிட்டுக் குடியேற்றப்படும் இந்தி மொழியினரின் ஆதிக்கத்தை எதிர்க்க முடியாமல் தடுமாறுவது வரலாற்றுப் பெருந்துயராகும்.

ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கில் வடவர்கள் குடியேறி தமிழர்களின் வேலைவாய்ப்பினை பறிக்கும் நிலையில் அதனைத் தடுக்கத்தவறி வேடிக்கை பார்ப்பதற்குப் பெயர்தான் திராவிட மாடலா?

தமிழ்நாட்டில் குடியேறும் வடவர்கள் குறித்துத் தமிழ்நாடு அரசிடம் என்ன தரவுகள் உள்ளது?

தனியார் நிறுவனங்கள் வடவர்களைப் பணியமர்த்தும் போக்கினை கட்டுப்படுத்ததிமுக அரசு என்ன திட்டம் வைத்துள்ளது?

தமிழ்நாட்டிற்கு வரும் பிறமாநிலத்தவருக்கு உள்நுழைவுச்சீட்டினை திமுக அரசு இதுவரை நடைமுறைப்படுத்த எந்த முயற்சியும் எடுக்காதது ஏன்?

தமிழ்நாட்டில் இயங்கும் தனியார் நிறுவனங்கள் 80 விழுக்காடு வேலைவாய்ப்பினை தமிழருக்கே வழங்க வேண்டும் என்ற நாம் தமிழர் கட்சியின் நெடுநாள் கோரிக்கையைத் தமிழ்நாடு அரசு சட்டமாக்கப்போவது எப்போது?

பிறமாநிலத்தவர் குறிப்பிட்ட ஆண்டுகள் தொடர்ந்து வசித்துவந்தால் மட்டுமே
கேரளாவில் குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, நிரந்தர இருப்பிடச் சான்று
உள்ளிட்டவை பெறமுடியுமென கட்டுப்பாடு உள்ளதுபோல் தமிழ்நாட்டில் இதுவரைகொண்டுவராதது ஏன்? என்ற நாட்டு மக்களின் இக்கேள்விகளுக் கெல்லாம் திமுகஅரசு என்ன பதில் கூறப்போகிறது?

 
ஆகவே, தமிழ்நாடு அரசு ஆந்திரா மற்றும் ஹரியானாமாநிலங்களில் நடைமுறையில் உள்ளதுபோல் தனியார்நிறுவனங்களிலும் 80 விழுக்காடு வேலையினை மண்ணின்மைந்தர்களான தமிழர்களுக்கே ஒதுக்கத் தனிச்சட்டமியற்ற வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.இதற்கு மேலாவது தமிழ்நாட்டில் குடியேறும் பிற மாநிலத்தவரைக் கட்டுப்படுத்த உள்நுழைவுச் சீட்டினை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமன்றும், அவர்கள் தமிழ்நாட்டில்குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை போன்றவை பெறுவதற்குஉரிய கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினை கேட்டுக்கொள்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்