இரண்டரை வயது சிறுமி கொலை: தாய்மாமனின் வெறிச் செயல்

Webdunia
புதன், 26 ஜூன் 2019 (12:15 IST)
கோவையில் இரண்டரை வயது பெண் குழந்தை கொலையில், அக்குழந்தையின் தாய்மாமனை போலீஸார் கைது செய்துள்ளது.

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கரிய கவுண்டனூரைச் சேர்ந்தவர் கனகராஜ். 38 வயதான இவர் ஒரு ஜே.சி.பி.டிரைவர். இவரது மனைவி காஞ்சனா. இவர்களுக்கு அரும்பதா என்ற இரண்டரை வயது பெண் குழந்தை இருந்தது.

இவர்கள் கோவை சரவணம்பட்டிக்கு அருகே உள்ள விளாங்குறிச்சியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கனகராஜ், அன்னூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தார்.

வீட்டில் தனியாக இருந்த காஞ்சனா, குழந்தையுடன் கவுண்டர் தோட்டத்திலுள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றார். அங்கு காஞ்சனாவின் தாய் பேச்சியமாள், தந்தை குப்புசாமி, தங்கை மகன் பூபதி, குப்புசாமியின் முதல் மனைவியிலன் மகள் கற்பக விஷ்ணு, மகன் ரகுநாதன் ஆகியோர் வசித்து வந்தனர்.

இரவில் காஞ்சனா குழந்தையுடன் தூங்கிய பிறகு அதிகாலை 3 மணி அளவில் அருகில் படுத்திருந்த குழந்தையை காணவில்லை. இதனையடுத்து அவர் தனது உறவினர்களின் உதவியுடன் அக்கம் பக்கத்தில் தேடினார்.

அப்போது வீட்டின் அருகே 500 மீட்டர் தொலைவில் உள்ள பாழடைந்த கிணற்றில், குழந்தை அரும்பதா இறந்து கிடந்தார்.

பின்னர் குழந்தையின் உடலை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்புவைத்தனர். பிரேத பரிசோதனையில் குழந்தையின் உடம்பில் காயம் எதுவும் இல்லை என தெரியவந்தது.

ஆனால் குழந்தையின் நுரையீரலில் தண்ணீர் இருந்தது தெரிய வந்தது. எனவே குழந்தை அரும்பதாவை யாரோ கிணற்றில் வீசி கொலை செய்துள்ளதாக யூகித்தனர்.

இதனை அடுத்து வீட்டிலிருந்த உறவினரிடம் போலீஸார் துருவி துருவி கேட்டதில், குழந்தையின் தாய்மாமன் ரகுநாதன், தான் குழந்தையை கொலை செய்ததாக ஒப்புகொண்டார்.

இதனையடுத்து ரகுநாதனை போலீஸார் கைது செய்தனர், இதன் பிறகு ரகுநாதன் அளித்த வாக்குமூலத்தில், தான் பால் வியாபாரம் செய்து வருவதாகவும், அன்று இரவு குடிபோதையில் இருந்ததால் குழந்தை அரும்பதாவை பாலியல் பலாத்காரம் செய்யத் தோன்றியதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அதிகாலை 3 மணியளவில் வீட்டில் அனைவரும் உறங்கி கொண்டிருந்தனர் என்றும், இது தான் சமயம் என்று அரும்பதாவை பாலியல் பலாத்காரம் செய்ய வெளியே தூக்கி வந்த போது குழந்தை அழுததால், அழுகை சத்தம் வெளியே கேக்காமல் இருக்க குழந்தையின் வாயை அழுத்தி பொத்தியதாகவும் கூறினார்.

பின்பு வாயை பொத்தியதில் பேச்சு மூச்சு இல்லாமல் போனதால், குழந்தை இறந்துவிட்டது என நினைத்து கிணற்றில் வீசி விட்டு, ஒன்றும் தெரியாதது போல் வீட்டிற்கு திரும்ப வந்து தூங்கிவிட்டதாகவும் கூறினார்.

கிணற்றில் மர்மமான முறையில் குழந்தை கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததை அடுத்து பத்திரிக்கையாளர்கள் ,குடும்ப உறுப்பினர்களிடம் சாவுக்கான காரணம் குறித்து பேட்டி எடுத்தனர்.

அப்போது குழந்தையின் தாய்மாமன் ரகுநாதன் சோகத்துடன் ஒன்றும் தெரியாதது போல் பேட்டி குடுத்தார். பின்பு போலீஸ் விசாரணை நடத்தியபோது ரகுநாதன், தான் குழந்தையை கொன்றதாக ஒப்புகொண்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்