கூட்டணிக்கு எதிர்ப்பு.! காங்கிரஸ் தலைவர் ராஜினாமா..! தேர்தலில் பின்னடைவா.?

Senthil Velan
ஞாயிறு, 28 ஏப்ரல் 2024 (12:22 IST)
நாடாளுமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.
 
நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் கடந்த 26ம் தேதியும் நடைபெற்றது. இதையடுத்து, வரும் 7, 13, 20,25 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஜூன் 1ம் தேதி கடைசி கட்டமான 7ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனிடையே, தலைநகர் டெல்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளுக்கு அடுத்தமாதம் 25ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், டெல்லி காங்கிரஸ் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுனா கார்கேவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், காங்கிரஸ் கட்சி மீது தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்திய ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்து இருப்பது டெல்லி காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
 
ஆம் ஆத்மி கட்சியில் உள்ள பாதி அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், நான் டெல்லி காங்கிரஸ் கட்சி தலைவராக நியமிக்கப்பட்டதில் இருந்து டெல்லி மேலிட பொறுப்பாளர் எந்த புதிய நிர்வாகிகளையும் நியமிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ALSO READ: நெருப்பை கக்கும் வெயில்..! கோடை வெயிலுக்கு 10 பேர் பலி.!!
 
நான் பரிந்துரை செய்த தலைவர்கள் காரணம் இன்றி நிராகரிக்கப்பட்டனர் எனவும் தொகுதி தலைவர்களை கூட தன்னால் நியமிக்க முடியவில்லை எனவும்,  இதனால் டெல்லியில் 150 க்கு மேற்பட்ட தொகுதி தலைவர்கள் இல்லை எனவும் அர்விந்தர் சிங் லவ்லி குற்றம் சாட்டி உள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த சம்பவம் அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்