மெட்டா நிறுவனத்திற்கு 213 கோடி அபராதம் விதித்து இந்திய போட்டி ஆணையம் உத்தரவு பிறப்பித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட வாட்ஸப் தனியுரிமை கொள்கை மூலம் வணிக முறைகளை சரியாக பின்பற்றவில்லை என மெட்டா நிறுவனத்திற்கு இந்திய போட்டி ஆணையம் அறிவுறுத்தி, இதற்காக தற்போது 213.14 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின்படி போட்டி எதிர்ப்பு பிரச்சனைகள் தொடர்பாக, இந்திய போட்டி ஆணையம் தெரிவித்த கால அவகாசத்திற்குள் சில நடத்தை ரீதியிலான தீர்வுகளை செயல்படுத்த வேண்டும் என்று மெட்டா/வாட்ஸ்அப் நிறுவனத்திடம் கூறப்பட்டிருந்தது.
இணையவழி மூலம் தகவல் பரிமாற்றம் செய்யும் செயலி, இணைய வழி காட்சி விளம்பரம் ஆகிய இரண்டு சந்தைகளில் இந்தியாவில் மெட்டா ஆதிக்கம் செலுத்தி வந்தது கண்டறியப்பட்டதை அடுத்து, இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக இந்திய போட்டி ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.