பெங்களூருவில் உள்ள சிறு வணிகர்கள் மற்றும் கடைகளில் No UPI, Only Cash என்ற பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பெங்களூரு தெருவோர விற்பனையாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் வழக்கறிஞர் கூறிய போது, சிறு வணிகர்கள் மற்றும் தெருவோர கடைகளில் யூபிஐ பரிவர்த்தனை அதிகமாக இருப்பதால், வருமான வரி நோட்டீஸ்களை பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், எனவேதான் பெரும்பாலான கடைகளில் இந்த பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஜி.எஸ்.டி. சட்டத்தின்படி, ஆண்டு வருவாய் ₹40 லட்சத்துக்கு மேல் இருந்தால், பொருள்கள் விற்கும் வணிகங்கள் பதிவு செய்து ஜி.எஸ்.டி. செலுத்த வேண்டும். அதே சமயம், சேவை வழங்குநர்களுக்கு இந்த வரம்பு வெறும் ₹20 லட்சம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில், சிறு வணிகர்கள் மற்றும் விற்பனையாளர்கள் யூபிஐ மூலம் பணம் பெறுவதால் அவர்களுடைய விற்பனை மதிப்பு தெரிந்து விடுகிறது. அதில் சில சமயம் ₹20 லட்சத்தை தாண்டிவிடுவதால், வருமான வரித்துறை மற்றும் ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் வருகிறது. இவற்றைத்தவிர்ப்பதற்காகவே பெரும்பாலான கடைகளில் தற்போது இந்த பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஒரு சாதாரண டீக்கடையில் கூடஒரு நாளைக்கு ₹20,000 முதல் ₹25,000 ரூபாய் வரை வியாபாரம் ஆகிறது. இது ஆண்டு கணக்கில் சேர்த்தால் ₹20 லட்சத்துக்கு அதிகமாக வந்து விடுவதால், ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் வருகிறது.
இதற்கு முன் வெறும் ரொக்கம் மட்டுமே வாங்கிக் கொண்டிருந்ததால், உண்மையான வருவாய் எவ்வளவு என்று வருமான வரித்துறை மற்றும் ஜி.எஸ்.டி. அலுவலகத்திற்கு தெரியாது. தற்போது 90% யூபிஐ மூலம் பணம் பெறப்படுவதால், வங்கி கணக்குகளின் அடிப்படையில் உண்மையான டர்ன் ஓவர் மற்றும் வருமானம் தெரிந்து விடுகிறது என்பதால், இந்த சிக்கல்களை தவிர்ப்பதற்காகவே பெரும்பாலான வியாபாரிகள் "ரொக்கம் மட்டுமே பெறப்படும்" என்ற பதாகைகளை வைத்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.