கேரளாவில் காதலனின் பேக் ஐடி என தெரியாமல் பேசி பழகிய பெண்ணை காதலனே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் உள்ள வர்கலா அடுத்த வடசேரிகோணம் பகுதியை சேர்ந்த சஞ்சீவ் என்பவரின் மகள் சங்கீதா. இவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். சங்கீதாவுக்கு பள்ளிக்கல் பகுதியை சேர்ந்த கோபு என்ற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மலர்ந்துள்ளது.
கடந்த சில காலமாக காதலர்கள் இருவரிடையே அடிக்கடி சண்டை, தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் சங்கீதா நடத்தை மேல் சந்தேகம் கொண்ட கோபு அவரை பற்றி அறிய அகில் என்ற பெயரில் பேக் ஐடி ஒன்றை தொடங்கியுள்ளார்.
அதன் மூலமாக சங்கீதாவுக்கு நட்பு அழைப்பு விடுத்து பேச தொடங்கியுள்ளார். அகில் என்ற பெயரில் பேசுவது தனது காதலன் கோபுதான் என தெரியாமல் சங்கீதாவும் அந்த நபரிடம் தொடர்ந்து பேசி வந்துள்ளார். தான் உருவாக்கிய பேக் ஐடியுடன் இவ்வாறாக பேசுவதால் சங்கீதா மேல் கோபமடைந்துள்ளார் கோபு.
இந்நிலையில் சம்பவத்தன்று அகில் என்ற பேக் ஐடி மூலமாக உன்னை சந்திக்க இன்று இரவு 1.30 மணிக்கு உங்கள் வீட்டிற்கு வருகிறேன் என கோபு கூறியுள்ளார். நடக்க போகும் கொடூரத்தை அறியாத சங்கீதா தனது ஆன்லைன் நண்பனை சந்திக்க வாசலில் வந்து நின்றுள்ளார்.
அங்கு ஹெல்மெட் அணிந்தபடி வந்த கோபு தான் வைத்திருந்த கத்தியால் சங்கீதாவின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடியுள்ளார். சங்கீதாவின் அலறல் சத்தம் கேட்டு வீட்டார் ஓடி வந்துள்ளனர். ஆனால் சங்கீதா ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் கோபுவை கைது செய்துள்ளனர்.