சிறையில் இருந்து விடுதலையாகிறார் கெஜ்ரிவால்.! சிபிஐ வழக்கில் ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம்..!!

Senthil Velan
வெள்ளி, 13 செப்டம்பர் 2024 (12:12 IST)
சிபிஐ வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.    
 
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தில் ஆம் ஆத்மி அரசு கொண்டு வந்த மதுபான கொள்கையில் முறைகேடு நிகழ்ந்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து துணை முதல்வர் மணிஷ் சிசோடியாக கைது செய்யப்பட்டார். டெல்லியையே அதிர வைத்த இந்த வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை கடந்த மார்ச் மாதம் 21ம் தேதி அவரை கைது செய்தது. 
 
இதையடுத்து, இதே வழக்கில் சி.பி.ஐ.யும் அவரை ஜூன் 26ம் தேதி கைது செய்தது.   இந்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி டெல்லி விசாரணை நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய நிலையில், அந்த ஜாமீனை ரத்து செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

வழக்கிலிருந்து ஜாமீன் கிடைத்த போதிலும், சிபிஐ வழக்கில் ஜாமீன் கிடைக்காததால் அவர் சிறையிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. சிபிஐ கைதை எதிர்த்தும், ஜாமீன் வழங்க கோரியும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.  நீதிபதிகள் சூர்யகாந்த், உஜ்சல் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.  


ALSO READ: மத்திய அரசின் திட்டங்கள் முடக்கம்.! ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல் டீசல்.! நிர்மலா சீதாராமன் முக்கிய அப்டேட்..!!
 
அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ கைது செய்த இரண்டு வழக்குகளிலும் ஜாமீன் கிடைத்துள்ளதால் கெஜ்ரிவால் 176 நாட்களுக்கு பிறகு சிறையில் இருந்து இன்று மாலை விடுதலை ஆகிறார். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்ததை ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்