அகமதாபாத் விமான விபத்து.. காயமடைந்த மகனை காப்பாற்ற தியாகம் செய்த தாய்.. சிகிச்சைக்கு வழங்கிய தோல்..!

Mahendran

திங்கள், 28 ஜூலை 2025 (15:37 IST)
கடந்த மாதம் அகமதாபாத்தில் நிகழ்ந்த கோரமான விமான விபத்தில், விமானத்தில் பயணித்த பெரும்பாலானோரும், விமானம் மோதிய கட்டிடத்தில் இருந்த சிலரும் உயிரிழந்த நிலையில், ஒரு தாய் தனது மகனை காப்பாற்றுவதற்காக செய்த மகத்தான தியாகம் குறித்த தகவல் தற்போது வெளியாகி, அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
 
விமானம் கட்டிடத்தின் மீது மோதியதும் மிகப்பெரிய அளவில் தீப்பிழம்புகள் ஏற்பட்டன. அந்த பெரும் தீவிபத்தில், கட்டிடத்தில் பணி செய்து கொண்டிருந்த ஒரு தாய், தனது மகனை காப்பாற்றுவதில் உறுதியாக இருந்த நிலையில், தன் தன் 8 மாத மகனைக் கட்டி அணைத்து, அவன் மீது தீப்பிழம்புகள் படாமல் பாதுகாத்தார். இதனால் அவரது உடல் 50 சதவீதத்திற்கும் மேல் தீக்காயங்களுக்கு உள்ளானது. தனக்கு ஏற்படும் ஆபத்தை பொருட்படுத்தாமல், தனது மகனுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதிலேயே அவர் தியாக மனப்பான்மையுடன் இருந்தார். இருப்பினும், அந்த தாயின் மகனுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டன.
 
இந்த நிலையில், தாய் மற்றும் மகன் இருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் படிப்படியாக இருவரும் குணமடைந்தனர். மகனின் வயது காரணமாக அவனுக்கு ஏற்பட்ட படுகாயங்களுக்கு சிகிச்சை அளிக்கத் தோல் ஒட்டுதல் தேவைப்பட்டது. அப்போது, அந்தத் தாய் சற்றும் தயங்காமல் தனது தோலை வழங்க முன்வந்தார். தாயின் தோல் எடுத்து மகனுக்கு ஒட்டுதல் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
 
தற்போது, தாய் மற்றும் மகன் இருவரும் பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தனது மகனின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தனது உயிரையே துச்சமென மதித்துத் தியாகம் செய்த அந்தத் தாய்க்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இது ஒரு தாயின் இணையற்ற பாசத்தையும் தியாகத்தையும் எடுத்துக்காட்டும் நெகிழ்ச்சியான சம்பவம்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்