டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் கெஜ்ரிவால் கைது குறித்து 7 நாளில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென்று சி.பி.ஐ.க்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதே வழக்கில் நீதிமன்றத்தில் வைத்தே சிபிஐ அதிகாரிகள் கெஜ்ரிவாலை கைது செய்தனர்.
இந்த நிலையில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மதுபானக் கொள்கை முறைகேடு விவகாரத்தில் சிபிஐ தன்னை கைது செய்து சிறையில் அடைத்தது ஆகியவை அனைத்தும் சட்ட விதிகளுக்கு எதிரானது என்று கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.
எனவே சிபிஐ அமைப்பின் இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த மனுவானது டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், கெஜ்ரிவால் மனு குறித்து 2 நாட்களில் மறு மனு தாக்கல் செய்யவும், 7 நாளில் விரிவான பதில் மனு தாக்கல் செய்யவும் சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டனர். மேலும் வழக்கு விசாரணையை ஜூலை 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.