மதுபான கொள்கை ஊழல் வழக்கில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தேர்தலின் போது பிரச்சாரம் மேற்கொள்ளும் வகையில் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. இடைக்கால ஜாமினை நீட்டிக்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததால், மீண்டும் அவர் சிறைக்கு சென்றார்.
இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு டெல்லி நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. கெஜ்ரிவாலுக்கு டெல்லி நீதிமன்றம் நேற்று இரவு 8 மணிக்கு ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் கெஜ்ரிவாலுக்கு வழங்கிய ஜாமீன் உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை அவசர மனு தாக்கல் செய்தது.
இந்த மனு நீதிபதி சுதிர் குமார் ஜெயின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.வி.ராஜு விசாரணை நீதிமன்றத்தில் தனது தரப்பு வாதத்தை நிறைவு செய்ய வாய்ப்பு மறுக்கப்பட்டது என தெரிவித்தார். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.