தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு: சத்யராஜ் மகளின் அறிக்கை

Webdunia
புதன், 2 ஜூன் 2021 (20:16 IST)
கொரோனா வைரஸ் தடுப்பூசி குறித்து திரையுலக பிரபலங்கள் பலர் வீடியோ மூலமும் டுவிட்டர் மூலமும் அறிக்கை மூலமும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் நிலையில் பிரபல நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
 
கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில் தடுப்பூசி போடுவது ஒன்றே இதிலிருந்து மீள்வதற்கான ஒரே வழி என மருத்து உலகம் சொல்கிறது. தமிழக அரசும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. ஆனாலும் பலர் அச்சமடைந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர மறுக்கின்றனர்.
 
இந்நிலையில் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் திவ்யா சத்யராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மனிதகுலத்திற்கு எதிராக வேகமாக பரவி வரும் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த, தமிழக அரசு மிகச்சிறப்பாக செயல்பட்டு வருவது நம்பிக்கை அளிக்கிறது. அதேவேளையில் கொரோனாவை முற்றிலுமாக ஒழிக்க நமக்கிருக்கும் ஒரே ஆயுதம், தடுப்பூசி தான் என்ற விழிப்புணர்வு மக்களிடத்தில் குறைவாக இருப்பதை உணர முடிகிறது.
 
ஒரு ஊட்டச்சத்து நிபுணராக நான் சந்திக்கும் பலருக்கும் தடுப்பூசி மீது அச்சமும் குழப்பமும் இருக்கிறது. மக்களுக்கு சந்தேகமும் கேள்விகளும் இருப்பது நியாயம் தான். அதை அவர்களுக்கு புரிய வைப்பது துறை சார்ந்தவர்களின் பொறுப்பு. தமிழக அரசு தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும், இந்தப் பெரும் தொற்றை முறியடிக்க மக்கள் நம்பியிருப்பது மருத்துவர்களை தான்.
 
ஆகவே ஒவ்வொரு மருத்துவமனையும் மருத்துவர்களும் தடுப்பூசியின் தேவையை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியது அவர்களின் அடிப்படை கடமை தடுப்பூசியை அனைவருக்கும் கிடைக்கச் செய்வோம் கொரோனாவை வெல்வோம்
 
இவ்வாறு திவ்யா சத்யராஜ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்