அனைத்து மக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி… மோடிக்கு கே எஸ் அழகிரி அறிவுரை!

புதன், 2 ஜூன் 2021 (11:58 IST)
தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி அனைத்து மக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி போடுவதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

இது சம்மந்தமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:-

“கடந்த 2020 ஜனவரி இறுதியில் இந்தியாவில் முதல் கரோனா தொற்று அறியப்பட்டு படிப்படியாக உயர்ந்த நிலையில், அதைக் கட்டுப்படுத்த ஏப்ரல் 24 இல் முன்னறிவிப்பின்றி பொது ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால், ஆகஸ்ட் 7 ஆம் தேதி கரோனா தொற்று 20 லட்சமாக உயர்ந்து டிசம்பர் 19 ஆம் தேதி ஒரு கோடியை எட்டியது. தற்போது 2021 ஜூன் 1 ஆம் தேதி கரோனா தொற்று 2 கோடியே 80 லட்சமாக உயர்ந்து மொத்த இறப்பு 3 லட்சத்தைத் தாண்டியுள்ளது. பலியானவர்களை மயானத்தில் எரிக்க இடமில்லை. பலியானவர்களைக் கங்கை நதியில் தூக்கி எறிகிற அவலநிலையை சுதந்திர இந்தியா இதுவரை கண்டதில்லை. இத்தகைய மனித உயிரிழப்பிற்கு யார் பொறுப்பு? பிரதமர் மோடி பொறுப்பேற்க வேண்டாமா?

கடந்த 15 மாதங்களாக கரோனாவின் கோரப்பிடியில் 136 கோடி மக்கள் சிக்கித் தவிக்கிறார்கள். அச்சம், பீதியோடு வீட்டுக்குள் அடைபட்டு வாழ்ந்து வருகிறார்கள். உற்றார், உறவினர், நண்பர்கள் நாள்தோறும் பலியாகும் செய்தி கேட்டு ஒவ்வொரு வீடுகளிலும் அழுகுரல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இது பிரதமர் மோடியின் காதுகளில் விழவில்லையோ? கரோனா தொற்றினால் மக்கள் நாள்தோறும் மடிந்துகொண்டிருக்கும்போது, உயிரைக் காக்கத் தேவையான 9,000 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஏற்றுமதி செய்தது ஏன்? மக்கள் உயிர்காக்கும் 11 லட்சம் ரெம்டெசிவிர் மருந்து ஏன் ஏற்றுமதி செய்யப்பட்டது? மக்கள் உயிர்காக்கும் பேராயுதமாக விளங்குகிற 7 கோடி தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது ஏன்? அனைத்து மக்களுக்கும் தேவையான உயிர்காக்கும் தடுப்பூசியை உற்பத்தி செய்கிற பொறுப்பை இரண்டு தனியார் நிறுவனங்களிடம் விட்டது ஏன் ? தடுப்பூசிக்கு மூன்று விதமான விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

இதை உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறது. தடுப்பூசி தயாரிக்கிற இரு தனியார் நிறுவனங்களிடம் ஒரே விலையில் கொள்முதல் செய்து, மாநில அரசுகள் மூலமாகத் தடுப்பூசி போட மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். அதற்கு மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் பதில் கூற முடியாமல் திணறியிருக்கிறார். கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி அறிவித்த புதிய தடுப்பூசி கொள்கைப்படி, மத்திய அரசு கொள்முதல் செய்து மாநில அரசுகள் மூலமாக 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாகத் தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போடுகிற பொறுப்பை மாநில அரசிடம் ஒப்படைத்தது ஏன்? மத்திய அரசு குறைவான விலையில் கொள்முதல் செய்வதும், மாநில அரசுகள் அதிக விலையில் கொள்முதல் செய்வதும் என்கிற இரட்டைவிலை கொள்கையை மத்திய அரசு புகுத்தியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.

கூட்டுறவு கூட்டாட்சியைப் பற்றி அடிக்கடி பேசுகிற பிரதமர் மோடியின் ஆட்சியில், தடுப்பூசியின் விலையை மத்திய அரசுக்கு ரூ. 150 , மாநில அரசிற்கு ரூ.300, தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 என மூன்று விதமாக விலை நிர்ணயிப்பது நியாயமா? ஒரே தடுப்பூசிக்கு மூன்று விலையா? இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 136 கோடி. இதில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 94 கோடி. இவர்களுக்கு இரண்டு முறை தடுப்பூசி போட 188 கோடி டோஸ்கள் தேவை. மே 31 நிலவரப்படி இதுவரை 21 கோடியே 31 லட்சம் டோஸ்கள் தான் போடப்பட்டுள்ளது. ஆனால் 4.5 கோடி பேருக்கு தான் 2 டோஸ் போடப்பட்டுள்ளது. இது மொத்த மக்கள் தொகையில் 3.17 சதவீதம் மட்டுமே. தற்போது மாதம் ஒன்றுக்கு இரண்டு தனியார் நிறுவனங்களும் உற்பத்தி செய்வது 7 கோடி டோஸ்கள் தான். தடுப்பூசி போட ஆரம்பித்து கடந்த 134 நாட்களில் சராசரியாக ஒரு நாளைக்கு 16 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் தான் போடப்பட்டுள்ளது. இதே எண்ணிக்கையில் தடுப்பூசி போட்டால் அனைவருக்கும் தடுப்பூசி போட 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிடும். அதுவரை மக்களின் உயிரைப் பாதுகாக்கும் உத்தரவாதத்தைப் பிரதமர் மோடி அளிப்பாரா?

பிரதமர் நேரு ஆட்சி செய்தபோது மலேரியா, சின்னம்மை, மூளைக்காய்ச்சல், காலரா, போலியோ போன்ற கொள்ளை நோய்களை ஒழிக்கத் தடுப்பூசி போடுகிற முதன்மைப் பொறுப்பை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு மக்களின் உயிரைக் காப்பாற்றியது. ஆனால், கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தான் இரண்டு தனியார் நிறுவனங்களுக்குத் தடுப்பூசியின் உற்பத்தியைப் பெருக்குவதற்காக முன்பணமாக ரூ. 4,500 கோடியை மோடி அரசு வழங்கியது. இதை 6 மாதங்களுக்கு முன்பே வழங்கியிருந்தால், இன்றைக்குத் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டிருக்காது. கரோனா தொற்றை எதிர்கொள்வதற்கு உரிய எதிர்கால செயல் திட்டத்தை முறையாக வகுக்க மத்திய பாஜக அரசு தவறியதால், மனித உயிரிழப்புகள் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் பெருகி வருகின்றன. இந்நிலையில், அன்னை சோனியா காந்தி அவர்களின் அறிவுறுத்தலின்படி அனைத்து மக்களுக்கும் இலவசமாகத் தடுப்பூசி போடுகிற முழுப் பொறுப்பை மத்திய அரசு ஏற்கவேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாகத் தீவிர பரப்புரையை இன்று முதல் காங்கிரஸ் கட்சி மேற்கொண்டுள்ளது.

இதன்மூலம் மக்களின் ஆதரவு திரட்டப்பட இருக்கிறது. வருகிற 4 ஆம் தேதி இக்கோரிக்கையை வலியுறுத்தி ஆளுநர், மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாக குடியரசுத் தலைவருக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்கள் மனு அளிக்க உள்ளார்கள். இதன்மூலம் அனைத்து மக்களுக்கும் இலவசமாகத் தடுப்பூசி போடுகிற முடிவை மத்திய அரசு எடுக்கவேண்டும் என்கிற அழுத்தத்தை ஏற்படுத்துவதற்காக, மக்களின் பேராதரவோடு இத்தகைய போராட்டங்களை காங்கிரஸ் கட்சி முன்னெடுத்துள்ளது. இதன்மூலம் அனைத்து மக்களுக்கும் இலவசமாகத் தடுப்பூசி போடுகிற முடிவை மத்திய அரசு எடுக்கவேண்டும் என்கிற அழுத்தத்தை ஏற்படுத்துவதற்காக, மக்களின் பேராதரவோடு இத்தகைய போராட்டங்களை காங்கிரஸ் கட்சி முன்னெடுத்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்