மக்களவைத் தேர்தலையொட்டி கூட்டணி கட்சிகளுடன் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தையை திமுக இன்று நடத்துகிறது.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை அண்மையில் நடத்தியது.
இந்நிலையில் 2ம் கட்ட பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற உள்ளது. இதற்காக மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உடனான பேச்சுவார்த்தை மாலை 4:30 மணிக்கும், மதிமுக உடனான பேச்சுவார்த்தை மாலை 5.30 மணிக்கும் நடைபெறுகிறது.
இந்த 2ம் கட்ட பேச்சுவார்த்தையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர் காதர் முகைதீன் தலைமையில், மாநில பொதுச் செயலாளர் முகமது அபுபக்கர், மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ ஷாஜகான், தேசிய செயலாளர் அப்துல் பாசித், மாநிலச் செயலாளர் ஆடுதுறை ஷாஜகான் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.
முதற்கட்ட பேச்சுவார்த்தையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியை திமுகவிடம் கேட்ட நிலையில், இன்று நடைபெறும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையிலும், அதே தொகுதியை கேட்கும் என தகவல் வெளியாகி உள்ளது.