அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை: சசிகலா அவ்வளவு பெரிய சக்தியா?

லெனின் அகத்தியநாடன்
சனி, 24 டிசம்பர் 2016 (12:00 IST)
தமிழக அமைச்சர்கள் முதல் இறுதியாக 10 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் வரை சசிகலாவை போயஸ் கார்டனுக்கே சென்று சந்தித்து வருவது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.


 

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு  அக்கட்சியின் பொதுச்செயலாளர் யார் என்று குழப்பம் நீண்டு வருகிறது. ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும், ஜெயலலிதாவிற்கு அரசியல் ஆலோசகராகவும் ஏறக்குறைய 35 ஆண்டுகாலமாக இருந்து வருபவர்.

ஒரு பக்கம் ’சின்னம்மா’ சசிகலாதான் அடுத்த பொதுச் செயலாளராக ஆக வேண்டும் பொன்னையன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.

அதற்கேற்றார் போல் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் சசிகலாவை வரவேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. பத்திரிக்கைகளிலும் கூட ஏகத்துக்கும் விளம்பரங்கள் கொடுக்கப்பட்டன. இதன் அதீத வெளிப்பாடாக மதுரையில் ‘சசிகலா எனும் நான்’ என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

இதற்கிடையில், ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியபோது, சில முக்கிய அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் காலில் விழுவது போன்ற வீடியோக்கள் கூட வெளியானது.

இதுதவிர பிற கட்சியினரும், தொழில் அதிபர்களும்கூட போயஸ் இல்லத்திற்கு சென்று சசிகலாவை தினசரி சந்தித்த வண்ணம் உள்ளனர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தா.பாண்டியன், தி இந்து பத்திரிக்கையின் முதன்மை செய்தி ஆசியர் ‘என்.ராம்’, டைம்ஸ் ஆப் இந்தியாவின் சென்னை பதிப்பு ஆசிரியர் அருண் ராம், குமுதம் நி‌ர்வாக இய‌க்குன‌ர் வரதராஜன், நியூஸ்7 செய்தி சேனல் உரிமையாளர் விவி சுப்பிரமணியன், தினத்தந்தி அதிபர் பாலசுப்பிரமணி ஆதித்தன் உள்ளிட்ட பலரும் சந்தித்தனர்.

கட்சியாளர்களும், மற்றவர்களும் சந்தித்ததற்கு இடையில், 10 பல்கலைக்கழகத்தை சேர்ந்த துணைவேந்தர்களும், அண்ணா பல்கலைகழகத்தின் பதிவாளரும் சசிகலாவை சந்தித்தது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. மாநிலக் கல்வியின் மேல்நிலையில் உள்ளவர்கள் சம்பந்தமே இல்லாத ஒருவரை சந்தித்தது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

”சசிகலாவை தலைமை நிறுவனங்களை சேர்ந்த கல்வியாளர்கள் சந்தித்தது மிகவும் அதிர்ச்சியானது என்றும் வெட்ககரமானது” என்று கல்வியாளரும், மாற்றத்திற்கான இந்தியா அமைப்பின் இயக்குநருமான நாராயணன் கூறியிருந்தார்.

ஜெயலலிதா அவர்களின் நெருங்கிய தோழி என்ற முறையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதாக அனைவரும் கூறினாலும்கூட, அதன்பின் உள்ள லாப சூத்திரம் அனைவரும் அறிந்ததே.

எந்த அதிகாரத்திலும் இல்லாத, அரசு பதவியிலும் நேரடியாக பங்கு வகிக்காத ஒருவரை இவ்வளவு அமைச்சர்களும், அதிகாரிகளும் சந்திப்பதன் சூசகம் புரியாமல் இல்லை. ஆனால், சசிகலா இதனை சாதகமாக நிச்சயம் பயன்படுத்தி அதிமுக உச்ச அதிகாரத்தை கைப்பற்ற நினைப்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லைதான்.

திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், ”போயஸ் தோட்டத்தில் குடியிருக்கும் எந்த பதவியிலும் இல்லாதவர்களுக்கு, ஒரு எஸ்.பி, நான்கு கூடுதல் எஸ்.பி, நான்கு துணை எஸ்.பி, ஏழு இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 240 பேர் கொண்ட காவல்துறையினரின் பாதுகாப்பு ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளது நியாயமானது தானே.
அடுத்த கட்டுரையில்