பதவிக்காகவும், பயத்துக்காகவும் அழுதார்களா தமிழக அமைச்சர்கள்?

லெனின் அகத்தியநாடன்
புதன், 7 டிசம்பர் 2016 (13:11 IST)
கடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு தனி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.


 

ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை அடைக்கப்பட்டதால் அவர் அப்போதைக்கு பதவி வகித்த முதலமைச்சர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து ஜெயலலிதா தலைமையிலான அரசும், அமைச்சரவையும் பதவி இழந்தது.

இதனையடுத்து தமிழகத்தில் 2வது முறையாக ஓ.பன்னீர்செல்வம் இன்று முதல்வராக பதவியேற்று கொண்டார். பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படடு உறுதிமொழியை ஏற்ற பின்னர் பதவியேற்புப் பத்திரத்தில் கையெழுத்திடும்போது பன்னீர்செல்வம் கண்ணீர் சிந்தினார்.

அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்கள் வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, ஆகியோர் பதவியேற்றபோது அழுதுகொண்டே உறுதிமொழியை ஏற்றனர். வளர்மதி அமைச்சராக பதவியேற்றபோது தேம்பித் தேம்பி அழுதார். சமூக நலத்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட பி.வளர்மதியும் அழுது கண்ணீர் வடித்தனர்.

இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு ஜெயலலிதா இறந்ததாக அறிவிப்பு வெளியானது. அதற்கு முன்னதாக இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஜெயலலிதா இறந்ததாக அறிவிக்கப்பட்ட பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக அறிவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மற்ற அமைச்சர்களும் புதிதாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.


 

ஜெயலலிதா சிறை சென்றபோது பதவி ஏற்றுக்கொண்ட அமைச்சர்கள் அனைவரும் அழுது, அறற்றி பதவி ஏற்றுக் கொண்டனர். ஆனால், ஜெயலலிதா மரணம் குறித்து வெளியானதைத் தொடர்ந்து பதவியேற்றபோது சிறிதுகூட சலனமில்லாமல் பதவியேற்றுக் கொண்டது பொதுமக்கள் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அதிமுக தொண்டர் காஸ்டன் கூறுகையில், ”தமிழக அமைச்சர்கள் பதவிக்காகவும், அம்மா அவர்களின் மீதுள்ள பயத்துக்காகவும் அழுதுள்ளார்கள். கொஞ்சமாவது விசுவாசம் இருந்திருந்தால் அவர்கள் இப்படி கல்லாக இருந்திருப்பார்களா. அம்மா இறந்து கிடந்தபோதுகூட அமைச்சர்கள் யாரும் கண்ணீர்விட்டதாக தெரியவில்லையே?” என்று ஆதங்கத்துடன் விம்மலுடனும் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்