மகாதீர் முகமது மீண்டும் மலேசிய பிரதமர் ஆவாரா? திடீர் தேர்தல் வருமா?

Webdunia
சனி, 20 ஜூன் 2020 (00:04 IST)
மலேசியாவில் எந்நேரமும் திடீர் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் எதிர்க்கட்சி கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளராக அன்வார் இப்ராகிம் அறிவிக்கப்பட வேண்டுமென அவரது தலைமையிலான பி.கே.ஆர் கட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதை எதிர்க்கட்சி கூட்டணியான 'பக்காத்தான் ஹராப்பா'னின் உறுப்புக் கட்சிகளின் தலைவர்கள் ஏற்றுக் கொள்வது உறுதியாகியுள்ளதால் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமதின் ஆதரவாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
 
ஒரு மாதமாக நீடித்து வரும் ஆலோசனை:
 
கடந்த ஒரு மாத காலமாக பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பிரதமர் வேட்பாளர் குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று கூறப்பட்ட நிலையில் அத்தகைய அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. இதற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோருவதாக அன்வார் இப்ராகிம் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே மீண்டும் பிரதமராகும் வாய்ப்புக் கிடைத்தால் தாம் ஓராண்டு அப்பதவியில் நீடிக்க விரும்புவதாக கூட்டணித் தலைவர்களிடம் மகாதீர் கூறியதாக நேற்று தகவல் வெளியானது.

இதையடுத்து பக்காத்தான் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அன்வார் தலைமையிலான பி.கே.ஆர் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இதில் மகாதீர் 3வது முறையாக பிரதமராக ஆதரவளிக்க இயலாது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. அன்வார் இப்ராகிம்தான் பக்காத்தான் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள பி.கே.ஆர் கட்சித் தலைமை, பக்காத்தான் கூட்டணிக் கட்சிகள் ஏற்கெனவே இதுதொடர்பாக ஒருமித்த கருத்தை எட்டியிருப்பதாகச் சுட்டிக் காட்டியுள்ளது.

எனினும் மகாதீர் தலைமையில் இயங்கும் சில எம்பிக்களின் ஆதரவின்றி அன்வார் தரப்பால் ஆட்சி அமைக்க இயலாது என்பதை சுட்டிக்காட்டும் அரசியல் கவனிப்பாளர்கள், பி.கே.ஆர் கட்சியின் இந்த முடிவு குறித்து மகாதீர் தெரிவிக்கும் கருத்துக்காக காத்திருக்கிறார்கள்.

தற்போதைய சூழலில் பக்காத்தான் கூட்டணி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியைப் பிடித்தாலும் மகாதீர் மூன்றாவது முறையாக பிரதமர் ஆவதற்கான வாய்ப்பு முடிவுக்கு வந்திருப்பதாகக் கருதப்படுகிறது.
இணைந்து செயல்பட்டு வரும் மகாதீர், அன்வார்
 
கடந்த சில ஆண்டுகளாக மலேசிய அரசியல் களத்தில் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமதும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் தலைவரான அன்வார் இப்ராகிமும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இதனால் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வலுவடைந்து கடந்த 2018 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.

இதையடுத்து மகாதீர் பிரதமரானார். இரண்டாண்டுகளுக்குப் பிறகு அன்வாரிடம் அவர் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பதாக தேர்தலுக்கு முன்பு பேச்சளவிலான உடன்பாடு செய்து கொள்ளப்பட்டிருந்தது. எனினும் மகாதீர் பதவி விலகல் தொடர்பில் திட்டவட்ட அறிவிப்பு எதையும் வெளியிடாததும், பதவி விலகுவதற்கு காலக்கெடு குறிப்பிட மறுத்ததாலும் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணிக்குள் சலசலப்பு எழுந்த்து.

இதையடுத்து கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி யாரும் எதிர்பாராத வகையில் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக மகாதீர் அறிவித்தார். அன்வார் தரப்பு கொடுத்த அழுத்தம் காரணமாக அவர் இம்முடிவை எடுத்ததாகக் கூறப்பட்டது. பின்னர் இடைக்காலப் பிரதமராக பொறுப்பேற்கும்படி மலேசிய மாமன்னர் மகாதீரைக் கேட்டுக் கொண்டார்.
 
ராஜினாமாவை அடுத்து நிகழ்ந்த பரபரப்புத் திருப்பங்கள்:
 
இதையடுத்து மலேசிய அரசியல் களத்தில் அடுத்தடுத்த திருப்பங்கள் ஏற்பட்டன.

அன்வார் இப்ராகிம் தலைமையானா பி.கே.ஆர் கட்சியில் ஏற்பட்ட மோதல் காரணமாக அதன் முக்கிய தலைவர்களில் ஒருவரான அஸ்மின் அலி உள்ளிட்ட 11 எம்பிக்கள் திடீரென கட்சியில் இருந்து விலகினர்.

மற்றொரு அதிரடி திருப்பமாக மகாதீர் தலைமையிலான மலேசிய அரசாங்கத்தில் உள்துறை அமைச்சராக இருந்த மொகிதீன் யாசின் எதிர்க்கட்சிகளான அம்னோ, பாஸ் ஆகியவற்றுடன் இணைந்து புதிய கூட்டணியை அமைத்தார்.

'பெரிக்கத்தான்' என்ற பெயரில் உருவான இந்தக் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியதுடன், மொகிதீன் யாசின் பிரதமரானார். எனினும் இன்றுவரை அவரது தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை. கொரோனா கிருமித் தொற்று விவகாரம் தொடர்பாக மலேசிய நாடாளுமன்றம் கடந்த மூன்று மாதங்களில் ஒரே ஒரு நாள் மட்டுமே கூடியது. எனினும் மன்னர் உரையாற்றியதுடன் அந்த ஒருநாள் கூட்டம் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் மிக விரைவில் நாடாளுமன்றம் கூடும்போது பிரதமர் மொகிதீன் யாசின் தலைமையிலான அரசுக்குப் பெரும்பான்மையை நிரூபிப்பது உள்ளிட்ட பல நெருக்கடிகள் இருப்பதாக அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

மூன்று மாதங்களுக்கு முன்பு ஆட்சியைக் கைப்பற்றியபோது மலேசிய மன்னரிடம் தமக்கு ஆதரவாக உள்ள எம்பிக்களின் பட்டியலை அளித்திருந்தார் பிரதமர் யாசின். அதை ஏற்றுக்கொண்டு அவரைப் பிரதமராகப் பதவி ஏற்க மன்னர் ஒப்புதல் வழங்கினார்.
 
இன்னும் பெரும்பான்மையை நிரூபிக்காத பெரிக்கத்தான் கூட்டணி அரசு:
 
அண்மையில் நாடாளுமன்றக் கூட்டம் ஒரு நாள் நடந்தபோது ஆளுங்கட்சி வரிசையில் 115 எம்பிக்கள் அமர்ந்திருந்தனர். மலேசிய நாடாளுமன்றத்தில் 222 இடங்கள் உள்ள நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க குறைந்தபட்சம் 112 எம்பிக்களின் ஆதரவு தேவை. இந்நிலையில் குறைந்தட்பட்ச ஆதரவுடன் ஆட்சியில் நீடித்து வருகிறார் பிரதமர் மொகிதீன் யாசின்.

ஆனால் பக்காத்தான் கூட்டணிக்குதான் பெரும்பான்மை பலம் உள்ளது என அதன் தலைவர்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர். நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். இத்தகைய சூழலில், 4 எம்பிக்களின் தயவில் நீண்ட காலத்துக்கு ஆட்சியில் நீடிக்கமுடியாது என்பதாலும், இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அல்ல என்றும் கொல்லைப்புறமாக வந்த அரசு என்றும் விமர்சிக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில் திடீர்ப் பொதுத்தேர்தலை எதிர்கொள்ள பிரதமர் மொகிதீன் யாசின் தரப்பு விரும்பக்கூடும் என்று அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

மலேசியாவில் எந்த நேரத்திலும் திடீர் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் ஆருடம் தெரிவித்து வரும் நிலையில், நடப்பு பிரிக்கத்தான் கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள அம்னோ, பாஸ் உள்ளிட்ட கட்சிகள் திடீர் தேர்தலை எதிர்கொள்வது குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றன. இதை அக்கட்சித் தலைவர்களே வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனர்.

ஊழல் வழக்குகளை எதிர்கொண்டுள்ள அம்னோ கட்சியைச் சேர்ந்த முன்னாள் பிரதமரான நஜீப் துன் ரசாக்கும் தற்போதைய சூழலில் தேர்தலை நடத்துவதே சரியாக இருக்கும் என்று கூறியுள்ளார். இவ்வாறு ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களே தேர்தலுக்குத் தயாராகி வரும் நிலையில் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியும் தேர்தலை எதிர்நோக்கி சில நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
புதிதாக உருவாகியுள்ள மற்றொரு கூட்டணி:
 
பக்காத்தான் கூட்டணியில் ஏற்கெனவே உள்ள கட்சிகளைத் தவிர மேலும் சில கட்சிகளும் இணைந்துள்ளன. இதையடுத்து அக்கூட்டணிக்கு 'பக்காத்தான் பிளஸ்' என்ற புதுப்பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்தக் கூட்டணியின் சார்பாக பிரதமர் வேட்பாளராக யார் அறிவிக்கப்படுவார் என்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

மகாதீர் பிரதமராகவும், அன்வார் துணைப் பிரதமராகவும் கூட்டணிக் கட்சிகளால் முன்மொழியப்பட்டனர். எனினும் அன்வாரின் பிகேஆர் கட்சி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை.
ஒருவேளை நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்து மீண்டும் பக்காத்தான் கூட்டணி ஆட்சி அமைந்தால் தாம் மேலும் 6 மாதங்களுக்குப் பிரதமர் பதவியில் நீடிக்க விரும்புவதாக மகாதீர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதன்பின்னர் அன்வாரிடம் ஆட்சியை ஒப்படைப்பதன் மூலம் தாம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வாய்ப்பு தமக்குக் கிட்டும் என்று அவர் பக்காத்தான் உறுப்புக் கட்சிகளிடம் கேட்டுக் கொண்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இதற்கும் அன்வார் தரப்பு உடன்படவில்லை எனத் தெரிகிறது.

மகாதீரும் அன்வாரும் இணைந்த கைகளாக செயல்பட்டால் மட்டுமே பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியால் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கமுடியும் என்று இருவரது ஆதரவாளர்களும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், பிரதமர் பதவி தமக்குதான் என்பதில் அன்வார் உறுதியாக உள்ளார்.

இதை மகாதீர் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் இருவரும் இணைந்த கைகளாக செயல்பட முடியும்.

எனவே, மகாதீர் எடுக்கப்போகும் முடிவுக்காக மலேசிய அரசியல் களம் ஆவலுடனும் பரபரப்புடனும் காத்திருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்