ஐடி கார்டு இல்லைன்னா உணவு விற்க அனுமதி இல்லை! ரயில்வே புதிய உத்தரவு! - அதிர்ச்சியில் சிறு வியாபாரிகள்?

Prasanth K

புதன், 23 ஜூலை 2025 (12:48 IST)

இந்திய ரயில்வேயின் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் பெட்டிகளில் உணவு விற்பனை செய்ய அங்கீகரிக்கப்பட்ட ஐடி கார்டு உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

இந்திய ரயில்வே நிலையங்களில் அனுமதிக்கப்படாத தரமற்ற உணவு விற்பனை போன்றவற்றை தடுக்கும் நோக்குடன் புதிய விதிகளை அமல்படுத்துவதாக ரயில்வே அறிவித்துள்ளது. நாடு முழுவதும் இந்திய ரயில்வேயின் ஆயிரக்கணக்கான ரயில்கள் பல ஆயிரம் ரயில் நிலையங்களை இணைத்து வருகின்றன. 

 

இந்த ரயில் நிலையங்களில் ரயில்வேயின் லைசென்ஸ் பெற்ற உணவகங்கள், கடைகள், ஐஆர்சிடிசி உணவகங்கள் பல செயல்பட்டு வருகின்றன. ரயில் பயணிகளுக்கு தேவையான உணவு, டீ, ஸ்னாக்ஸ் வகைகள், குளிர்பானங்கள் என பலவும் இவர்களால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே அனுமதி பெறாத சில சிறு வியாபாரிகளும் பழங்கள், ஸ்னாக்ஸ் உள்ளிட்டவற்றை ரயில்களில் விற்கின்றனர்.

 

இந்நிலையில் ரயில் பயணிகளுக்கு தரமான, ஆரோக்கியமான உணவுகள் ரயில்வேயின் அனுமதி பெற்ற கடைகள் மூலம் மட்டும் கிடைப்பதை உறுதி செய்ய ஐடி கார்டுகளை கட்டாயமாக்கியுள்ளது இந்திய ரயில்வே. ஐஆர்சிடிசி பணியாளர்கள் அவர்களது ஐடி கார்டையும், மற்ற ரயில்நிலைய ஒப்பந்தம் பெற்ற கடைக்காரர்கள் தங்கள் ஊழியர்களுக்கு க்யூஆர் கோடு உடன் கூடிய ஐடி கார்டுகளை விநியோகிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஐடி கார்டு இல்லாதவர்கள் உணவுப்பொருட்களை விற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது.

 

இந்த ஐடி கார்டு நடைமுறையால், அனுமதி பெறாமல் ரயில் ப்ளாட்பாரங்களில், ரயில்களுக்குள் உணவு, டீ விற்கும் சாதாரண சிறுவியாபாரிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்