ஏற்கனவே, தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் என பாஜக பேசி வரும் நிலையில், "கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியைப் பகிர்ந்து கொடுக்க நாங்கள் என்ன ஏமாளியா?" என எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்திருந்தார். இந்த சூழலில் தினகரனின் கருத்துகள் புதிய விவாதங்களை தூண்டியுள்ளன.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், 2025 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்துவதே தங்கள் கட்சியின் நோக்கம் என்று தெரிவித்தார். "வரும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்தில் கூட்டு அமைச்சரவைதான் இருக்கும். ஆட்சி அதிகாரத்தில் அனைத்து கட்சிகளும் பங்கு பெறும்" என்று அவர் திட்டவட்டமாக கூறினார்.
மத்தியில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி அரசுதான் அமைத்தது என்பதை சுட்டிக்காட்டிய தினகரன், "அதேபோல், தமிழ்நாட்டிலும் அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்றாலும் கூட்டணி அரசுதான் அமையும்" என்று வலியுறுத்தினார்.