இந்திய விண்வெளி நிலையம்: இஸ்ரோ விண்வெளியில் ஆய்வகம் அமைப்பது எதற்காக? அதில் என்ன செய்யும்?

Prasanth Karthick
சனி, 12 அக்டோபர் 2024 (14:03 IST)

பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன் எனப்படும் இந்திய விண்வெளி மையத்தை இஸ்ரோ 2035ஆம் ஆண்டு நிறுவத் திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் தற்போதே நடைபெற்று வருகின்றன.

 

 

இந்த மையத்தின் முதல் பாகம் 2028ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் எஸ் சோம்நாத் தெரிவித்திருந்தார். இதற்காக அமைச்சரவையின் அதிகாரபூர்வ ஒப்புதல் கடந்த மாதம் வழங்கப்பட்டது.

 

முதல் பாகம் விண்ணில் செலுத்தப்பட்டு ஏழு ஆண்டுகள் கழித்து இந்தியா தனது விண்வெளி மையத்தை முழுமையாக இயக்கத் தயாராக இருக்கும்.

 

கடந்த 1984ஆம் ஆண்டு சோவியத் நாட்டு ராக்கெட்டில், இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் ஷர்மா விண்வெளி சென்றிருந்தார். அதன் பிறகு இந்தியர்கள் விண்வெளிக்குச் செல்லவில்லை.

 

நிலவுக்கும் செவ்வாய் கோளுக்கும் மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் திட்டத்திற்கு, சர்வதேச விண்வெளி மையம் முக்கியமான படிக்கல்.

 

இந்த விண்வெளி மையத்தை அமைப்பது இந்தியாவுக்கு சர்வதேச விண்வெளி அரங்கில் முக்கிய இடத்தைப் பல வழிகளில் பெற்றுத் தரும்," என்று கூறுகிறார் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முன்னாள் மூத்த விஞ்ஞானியும் மஹாலி இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியருமான முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன்.

 

விண்வெளி மையம் என்றால் என்ன?
 

விண்வெளி மையம் என்பது பூமியைச் சுற்றி வரும் பெரிய, மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு கட்டமைப்பு. இது விண்வெளி வீரர்கள் விண்வெளியில் வாழவும் பணியாற்றவும் விண்வெளி ஆய்வுகளை மேற்கொள்ளவும் வடிவமைக்கப்படுகிறது.

 

பூமியில் இருந்து செலுத்தப்படும் விண்கலன்கள் குறிப்பிட்ட இடங்களுக்குச் செல்லும். ஆனால் விண்வெளி மையம் என்பது பூமியின் சுற்றுவட்டப் பாதையிலேயே நிலைகொண்டிருக்கும். பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இதுவரை இரண்டு விண்வெளி நிலையங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று சர்வதேச விண்வெளி நிலையம். இரண்டாவது, சீனாவின் டியான்கோங் விண்வெளி நிலையம்.

 

புவியீர்ப்பு விசை காரணமாக பூமியில் செய்ய முடியாத சோதனைகளை விண்வெளி மையத்தில் விண்வெளி வீரர்கள் மேற்கொள்கின்றனர். இந்தச் சோதனைகள் உயிரியல், இயற்பியல், பொருள் அறிவியல் போன்ற பல்வேறு துறைகளை உள்ளடக்கியதாக இருக்கும்.

 

விண்வெளி வீரர்கள் பல மாதங்கள் வரை தங்குவதற்கான ஏற்பாடுகள் இதில் இருக்கும். அதாவது, விண்வெளி நிலையத்தில் ஓய்வறைகள், சமையலறைகள், கழிவறைகள் என அனைத்து வசதிகளும் இருக்கும்.

 

விண்வெளி மையங்கள் சூரிய ஒளித் தகடுகளால் இயக்கப்படுகின்றன. மேலும் காற்று, நீர் மறுசுழற்சி அமைப்புகளும் இந்த மையங்களில் இருக்கும்.

 

பூமியில் இருந்து ஏதேனும் பொருட்கள், கருவிகளை வழங்குவதற்கோ அல்லது விண்வெளி வீரர்களை வீட்டிற்கு அழைத்து வருவதற்கோ விண்கலன்கள் வரும்போது, அவற்றைக் கச்சிதமாக விண்வெளி மையத்துடன் இணைக்கக்கூடிய வசதிகள் (docking port) அவற்றில் உள்ளன.

 

இந்திய விண்வெளி மையத்தில் என்னென்ன பாகங்கள் இருக்கும்?

 

பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன் எனப்படும் இந்திய விண்வெளி நிலையம் ஐந்து பாகங்களைக் கொண்டதாக இருக்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

 

 

அடிப்படை பாகம் (Base Module): ஃபேஸ் மாடியூல் எனப்படுவது இந்த மையத்தின் அடிப்படைப் பாகம். அதாவது விண்வெளி வீரர்கள் மிகக் குறைந்த புவி ஈர்ப்பு சக்தியில் நீண்ட நாட்கள் வாழ்வதற்கான சூழல்களைச் சரிபார்த்து பராமரிக்கும் பாகம். பாரத் விண்வெளி மையத்தின் அடிப்படைப் பாகம் 2028ஆம் ஆண்டுக்குள் விண்ணில் செலுத்தப்படும். இதற்கான வடிவம் இறுதி செய்யப்பட்டுள்ளது. முதலில் ஆளில்லாமல் விண்ணில் செலுத்தப்படும் இந்தப் பாகம், சோதனைகளுக்குப் பிறகு மனிதர்கள் பயன்பாட்டிற்கு வரும்.

 

இணைப்புப் பாகம் ( Docking Module): இதுதான் பூமியிலிருந்து வரும் விண்கலனை, விண்வெளி மையத்துடன் இணைக்கக்கூடிய பாகம். விண்வெளி வீரர்கள், கருவிகள், வீரர்கள் தங்குவதற்குத் தேவையான பொருட்கள் ஆகியவற்றை இதன்மூலம் பெற்றுக் கொள்ளலாம். அவசரக் காலத்தில் வீரர்களை உடனடியாக வெளியேற்றவும் இந்தப் பாகம் அவசியம்.

 

ஆராய்ச்சிப் பாகம் (Reseasrch Module): விண்வெளி, உயிரியல், இயற்பியல் எனப் பல்வேறு துறைகளில் குறைந்த புவி ஈர்ப்பு விசையில் செய்ய வேண்டிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் இடமாக இது அமையும்.

 

ஆய்வுப் பாகம் (Laboratory module): இது விண்வெளி வீரர்கள் தங்கள் சோதனைகளைச் செய்வதற்கான கூடுதல் இடம் அளிக்கும் பாகம்.

 

பொது பணியிடப் பாகம் (Common Working Module): இந்தப் பாகம் விண்வெளி வீரர்கள் தங்கள் அன்றாடப் பணிகளை மேற்கொள்ளவும், மற்ற வீரர்களுடன் இணைந்து பணியாற்றவும், இளைப்பாரவும் தேவையான வசதிகளைக் கொண்டது.

 

இந்த விண்வெளி மையத்தில் 3 அல்லது 4 விண்வெளி வீரர்கள் தங்கிப் பணி புரியலாம். குறுகிய காலத்திற்குத் தங்க வேண்டும் என்றால் ஆறு பேர் வரை தங்குவதற்கான வசதிகள் உள்ளன.

 

இந்திய விண்வெளி நிலையம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய த.வி.வெங்கடேஸ்வரன், “தற்போது செயல்பட்டு வரும் சர்வதேச விண்வெளி மையம் 2031ஆம் ஆண்டு காலாவதியாகிறது. அதன் பின் மீண்டும் சர்வதேச விண்வெளி மையம் அமைக்கப்படும்.

 

அதில் எந்தெந்த நாடுகள் பங்கு பெறும் என்பது இன்னும் முடிவாகவில்லை. இத்தகைய சூழலில், இந்தியா தனக்கென விண்வெளி மையத்தை தனது திறன்களைக் கொண்டு அமைப்பது முக்கியமான நகர்வு” என்றார்.

 

24 ஆண்டுகளாக இயங்கி வரும் விண்வெளி மையம்
 

கடந்த 2000ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நிறுவப்பட்ட சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) தற்போது வரை விண்ணில் செயல்பட்டு வருகிறது.

 

இது நாசா (அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு), ராஸ்காஸ்மோஸ், இஎஸ்ஏ (ஐரோப்பிய விண்வெளி அமைப்பு), ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு, கனடா விண்வெளி அமைப்பு எனப் பல்வேறு நாடுகளின் கூட்டு முயற்சியால் கட்டப்பட்டது.

 

இதுவரை 20 நாடுகளில் இருந்து 250க்கும் மேற்பட்டவர்கள் இந்த விண்வெளி மையத்திற்குச் சென்று வந்துள்ளனர். விண்வெளி பற்றியும், மனிதர்கள் அங்கு எவ்வாறு வாழ்ந்து பணியாற்ற முடியும் என்பது பற்றியும் மேலும் அறிய இது விஞ்ஞானிகளுக்கு உதவுகிறது.

 

விண்வெளி மையங்களுக்கு ஆற்றல் எங்கிருந்து கிடைக்கிறது?

 

நாம் அன்றாடம் பயன்படுத்தும் கையடக்க செல்போனிலேயே, தினசரி சார்ஜ் போட வேண்டியது அவசியமாகிறது. அப்படியிருக்க, விண்ணில் பல்லாண்டுக் காலத்திற்கு நிலைகொண்டிருக்க விண்வெளி நிலையத்திற்கு அதிகளவிலான ஆற்றல் தேவை.

 

ஆனால், இந்த ஆற்றலை பூமியில் இருந்து கொண்டு செல்ல இயலாது. மாறாக, விண்வெளி நிலையம் தனக்குத் தேவையான ஆற்றலை சூரிய ஒளியில் இருந்து பெற்றுக் கொள்கிறது.

 

இந்திய விண்வெளி மையத்தில் பொது பணியிடப் பாகம் தவிர அனைத்துப் பாகங்களிலும் சூரிய மின் தகடுகள் (Solar panels) பொருத்தப்பட்டிருக்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

 

நாசா தகவல்களின்படி, தற்போது விண்ணில் இருக்கும் சர்வதேச விண்வெளி மையத்தில் 27 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் சூரிய ஒளி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.

 

பூமியின் நிழல் தன் மீது படும் சில நிமிடங்கள் தவிர, இந்தத் தகடுகளால் தினசரி, முழு நேரமும் சூரிய ஒளியைப் பெற முடியும். நேரடியாக சூரிய ஒளியைப் பெறும்போது, உள்ளே இருக்கும் அதன் பேட்டரிகள் சார்ஜ் செய்யப்படும். பூமியின் நிழல் படும் நேரத்தில் அந்த பேட்டரி, விண்வெளி மையத்திற்குத் தேவையான ஆற்றலைத் தரும்.

 

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்