ராக்கெட் தொழில்நுட்பத்தை அடித்தட்டு மக்களுக்காக பயன்படுத்த நினைத்த மாபெரும் விஞ்ஞானி

Prasanth Karthick

புதன், 25 செப்டம்பர் 2024 (10:31 IST)

"ராக்கெட் உள்பட எவ்வளவு அதிநவீன தொழில்நுட்பமாக இருந்தாலும், அதன் தாக்கம் அடித்தட்டு மக்களின் வாழ்வில் எதிரொலிக்கவில்லை என்றால், அந்த தொழில்நுட்பத்தால் எந்தப் பயனும் இல்லை எனக் கருதியவர் சதிஷ் தவன்” என தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார் இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரி ரங்கன்.



 

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவராக 1972-இல் சதீஷ் தவன் பொறுப்பேற்றுக் கொண்டார். அது மிகவும் இக்கட்டான ஒரு காலகட்டம் என்று தான் சொல்லவேண்டும். காரணம், இந்திய விண்வெளி ஆய்வின் தந்தை எனக் கருதப்படும் டாக்டர் விக்ரம் சாராபாய், 1971 டிசம்பரில் காலமானார்.

 

விண்வெளித் துறையில் அடுத்த பத்தாண்டுகளுக்கு இந்தியா என்ன செய்ய வேண்டும் என்பதற்கான செயல்திட்ட அறிக்கையை 1970ஆம் ஆண்டு ஜூலையில் மத்திய அரசிடம் அளித்திருந்தார் டாக்டர் விக்ரம் சாராபாய். அவரது திட்டங்களை நடைமுறையில் சாத்தியப்படுத்தும் சவாலான பொறுப்பை ஏற்றுக்கொண்டார் சதீஷ் தவன். அந்த வகையில், இந்திய விண்வெளி திட்டம் தொடர்பாக கனவு கண்டவர் விக்ரம் சாராபாய் என்றாலும் அதனை நடத்திக் காட்டியவர் சதீஷ் தவன்.

 

பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் (IISc) இயக்குநர் என்ற பொறுப்புடன், கூடுதலாக இஸ்ரோவின் தலைவர் பதவியையும் அவர் வகித்தார். இஸ்ரோ தலைவர் பதவிக்கு அவர் பெற்ற மாதச் சம்பளம் வெறும் 1 ரூபாய்.

 

‘ஒரு மிகச்சிறந்த வழிகாட்டி’- நம்பி நாராயணன்

 

சதீஷ் தவனின் கல்வி குறித்த விவரம் நிச்சயமாக ஒருவரை ஆச்சரியப்படுத்தும். கணிதம் மற்றும் இயற்பியலில் பிஏ (BA), ஆங்கில இலக்கியத்தில் எம்ஏ (MA), பிஇ (BE) மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எம்எஸ் (MS) ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங். அதுமட்டுமல்லாது ஏரோநாட்டிக்ஸ் மற்றும் கணிதம் ஆகிய துறைகளில் இரு முனைவர் பட்டங்கள்.

 

“புத்திசாலி, பல துறைகளில் அபார அறிவு கொண்டவர் என்பதைத் தாண்டி அவர் ஒரு மிகச்சிறந்த மனிதர் மற்றும் வழிகாட்டி”, என்று கூறுகிறார் இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானியும், சதீஷ் தவனுடன் பணியாற்றியவருமான நம்பி நாராயணன்.

 

சதீஷ் தவனுடனான ஒரு நெகிழ்ச்சியான அனுபவத்தை பிபிசி தமிழிடம் அவர் பகிர்ந்துகொண்டார்.

 

“இஸ்ரோவின் தலைவராக சதீஷ் தவன் பொறுப்பேற்றுக் கொண்ட காலகட்டத்தில் நான் திருவனந்தபுரத்தில் உள்ள தும்பா மையத்தில் பணியாற்றிக் கொண்டு இருந்தேன். அது இஸ்ரோவின் ஆரம்ப காலகட்டம். அப்போது ஒரு இன்ஜின் மட்டுமே கொண்ட ராக்கெட் பரிசோதனைகளை செய்துவந்தோம். அதற்கு மாற்றாக நான்கு இன்ஜின்கள் கொண்டு பரிசோதிக்க நான் யோசனை கூறினேன். அதற்கான கூடுதல் செலவு என்பது ஒரு கோடி. அப்போது அது மிகப்பெரிய தொகை. அதை முன்னெடுக்க நான் நினைத்தபோது, சதீஷ் தவன் வேண்டாம் என்று தடுத்துவிட்டார். காரணம் அப்போது இருந்த சூழ்நிலைகள் அப்படி.” என்றார் நம்பி நாராயணன்.

 

“இது நடந்து 10-12 வருடங்களுக்கு பிறகு சதீஷ் தவன் இஸ்ரோ தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஆனாலும் கூட இஸ்ரோவின் பணிகளை தினமும் பார்வையிட்டு வந்தார். அப்போது இஸ்ரோவின் எதிர்கால திட்டங்கள் தொடர்பான ஒரு கூட்டத்தில், நான்கு இன்ஜின்கள் கொண்டு ராக்கெட் சோதனை குறித்து விவாதிக்கப்பட்டது. “‘நாம் ஏன் முன்பே இந்த சோதனையைச் செய்யவில்லை. இப்போது அதற்கான செலவு பலமடங்கு அதிகரித்துவிட்டது அல்லவா’ என்ற கேள்வி சில விஞ்ஞானிகளால் எழுப்பப்பட்டது. நான் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தேன். அப்போது கையை உயர்த்திய சதீஷ் தவன், ‘நம்பி நாராயணன் முன்பே இதை முன்னெடுக்க முயற்சி செய்தார். நான்தான் தடுத்து விட்டேன், அதற்காக வருந்துகிறேன்’ என வெளிப்படையாக கூறினார். அவ்வளவு பெரிய மனிதர் இப்படி எல்லோர் முன்னிலையிலும் கூறியிருக்க தேவையில்லை. அவர் எனக்கு மட்டுமல்ல பல இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு கடவுளுக்கு நிகரானவர்” என்று கூறுகிறார் நம்பி நாராயணன்.

 

ஆர்யபட்டா, இந்தியா முதல் முறையாக, தானே சொந்தமாகத் தயாரித்த செயற்கைக்கோள். 1975ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் தேதி சோவியத் யூனியனிலிருந்து காஸ்மோஸ் 3 எம் ராக்கெட்டைப் பயன்படுத்தி இது விண்ணில் ஏவப்பட்டது. இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த செயற்கைக்கோள் ஏவப்பட்டது.

 

இந்த திட்டம் குறித்த அனுபவங்களை தனது கட்டுரையில் விவரிக்கிறார் இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கே.கஸ்தூரி ரங்கன்.

 

“‘ஆர்யபட்டா’ திட்டத்தின் தலைவராக சதீஷ் தவன் இருந்தார். அப்போது அவருடன் நானும் பணியாற்றினேன். ‘விண்வெளித் துறையில் இந்தியாவுக்கான முதல் வாய்ப்பு இது. இதில் நாம் தோல்வியடைந்தால், இந்தியாவின் மீதான உலகின் நம்பகத்தன்மை போய்விடும்’ என எங்கள் குழுவிடம் தொடர்ந்து கூறுவார். ஆர்யபட்டா திட்டம் வெற்றியடைந்தபிறகு, அவர் வேறு எந்த இஸ்ரோ திட்டத்திற்கும் தலைமை தாங்கவில்லை. பொறுப்புகள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். பல இளம் தலைவர்கள் உருவாக காரணமாகவும் இருந்தார்” என்கிறார் கஸ்தூரி ரங்கன்.

 

1972 முதல் 1984 வரை இஸ்ரோவின் தலைவராக இருந்தார் சதீஷ் தவன். இந்த காலகட்டத்தில் இஸ்ரோவின் நிர்வாக அமைப்பும் மாறியது. மையப்படுத்தப்பட்ட அணுகுமுறைக்குப் பதிலாக, ராக்கெட்டை உருவாக்குதல், ஏவுதல், செயற்கைக்கோள்களை உருவாக்குதல் என பல பிரிவுகள் உருவாக்கப்பட்டு இயக்குநர்கள் நியமிக்கப்பட்டனர். இதன் மூலம் ஒவ்வொரு பிரிவும் தனித்துவத்துடன் விரைவாக இயங்க முடிந்தது.

 

அதேபோல சதீஷ் தவனின் தலைமையில் தான் விண்வெளி ஆய்வுத் துறையில் இந்தியா ஒரு முக்கியமான நாடாக மாறத் துவங்கியது. இஸ்ரோவில் அதிக ஆண்டுகள் தலைவராக இருந்தவரும் சதீஷ் தவன் தான்.

 

‘சாமானிய மக்களுக்காக யோசித்தவர்’
 

விண்வெளித் துறை என்பதை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த ஒரு துறையாக மட்டும் பார்க்காமல், அதன் மூலம் சாமானிய மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதில் சதீஷ் தவன் அதிக ஆர்வம் செலுத்தினார் எனக் குறிப்பிடுகிறார் கஸ்தூரி ரங்கன். இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை பின்வருமாறு விவரிக்கிறார்.

 

“1976ஆம் ஆண்டு சென்னை ஐஐடியில் ஒரு புதிய திட்டம் குறித்து உரையாற்றினார் சதீஷ் தவன். தொழில்நுட்பம் தொடர்புடைய ஒரு திட்டம் எப்படி லட்சக்கணக்கான பாமர மக்கள் மற்றும் பழங்குடியினருக்கு பயன்படும் என்பதை அவர் விளக்கினார்.”

 

“இலுப்பை, ஆமணக்கு, வேம்பு போன்றவற்றின் விதைகளிலிருந்து எண்ணெய் எடுத்து, பாலியோல் (Polyol) எனப்படும் கரிமச் சேர்மத்தை உற்பத்தி செய்து, அதை பெட்ரோலியப் பொருட்களின் உற்பத்திக்கு பயன்படுத்துவது. மேலும் இதன் மூலம் சுமார் 40 லட்சம் டன் நச்சுத்தன்மையற்ற, மக்கும் உரம் உபரிபொருளாக கிடைக்கும் என கணக்கிடப்பட்டது. அதனால் விவசாயம் மற்றும் உணவு உற்பத்தி துறை மிகப்பெரிய அளவில் பயனடையும்.”

 

“இப்படிப்பட்ட திட்டம் நிறைவேறினால் பல லட்சம் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும், இயற்கையும் பாதுகாக்கப்படும் என அவர் நம்பினார். ஆனால் பொருளாதார காரணங்களுக்காக இத்திட்டம் கைவிடப்பட்டது”

 

“அதற்காக மிகவும் கோபப்பட்டார் சதீஷ் தவன். இந்த திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வு என்பது பொருளாதாரம் சார்ந்து தான் இருந்தது, இதன் மூலம் அடித்தட்டு மக்களுக்கு கிடைக்கும் பயன்கள் கணக்கில் எடுக்கப்படவில்லை. அதனால் தான் இத்திட்டம் அரசால் கைவிடப்பட்டது என அவர் வருத்தப்பட்டார்.” இவ்வாறு தனது கட்டுரையில் விவரிக்கிறார் கஸ்தூரி ரங்கன்.

 

மேலும், “தனது எந்த உணர்ச்சிகளையும் எளிதாக அவர் வெளிப்படுத்த மாட்டார். எஸ்.எல்.வி. 3 (SLV 3) தோல்வியடைந்த போது தனது கவலையை வெளிகாட்டிக்கொள்ளாமல், நாம் சற்று தடுமாறிவிட்டோம் ஆனால் வீழவில்லை என்று கூறினார். அவர் கொடுத்த உற்சாகம் மற்றும் வழிகாட்டுதலால் தான் அடுத்த ஒரே வருடத்தில் எஸ்.எல்.வி. 3 மீண்டும் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.” என்கிறார் கஸ்தூரி ரங்கன்.

 

செப்டம்பர் 25, 1920ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் சதீஷ் தவன் பிறந்தார். இந்திய அறிவியல் கழகத்தில் (IISc) 1951இல் பேராசிரியராக இணைந்து, பின்னர் 1962இல் அதன் இயக்குநராக உயர்ந்தார். பின்னர் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் அழைப்பின் பேரில் 1972இல் இஸ்ரோ தலைவராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார். இன்று விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்காவின் நாசா மற்றும் ரஷ்ய, சீன விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் வரிசையில் இஸ்ரோவும் இடம் பெற்றிருப்பதில் அவரது பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

 

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்