வாட்ஸ்ஆப்: உங்கள் செய்திளை கண்காணிக்க இந்திய அரசு விரும்புவது ஏன்?

Webdunia
வெள்ளி, 1 நவம்பர் 2019 (21:51 IST)
பிராசாந்தோ கே ராய்
 
(இக்கட்டுரையில் வரும் கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்த கருத்துகளே. இவர் பிபிசியின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்.)
 
சமூக ஊடகங்களில் பகிரப்படும் குறுஞ் செய்திகளை கண்காணித்து , இடைமறித்து படிக்கும் இந்தியாவின் திட்டம் கட்டாயமாக அமல்படுத்தப்படவுள்ளதால் பயன்பாட்டாளர்களும் அந்தரங்க உரிமைக்கான செயல்பாட்டாளர்களும் எச்சரிக்கையுடன் செயல்படுகின்றனர். பல்வேறு துறைகளை சார்ந்த அமைப்புகளுக்கும் நிறுவனங்களுக்கும் இது சிக்கலாக அமைத்துள்ளது.
இந்திய தகவல் தொழில் நுட்பதுறை ஜனவரி 2020ம் ஆண்டிற்குள் சமூக ஊடகங்களில் செய்திகளை அனுப்புதல் மற்றும் பகிர்தல் தொடர்பான புதிய விதிமுறைகளை வெளியிடவுள்ளது. பல வகையான இணைய வர்த்தகம் மற்றும் வலைத்தளங்களும், செயலிகள் உள்ளிட்டவையும் இந்த திட்டத்தின் கீழ் கண்காணிக்கப்படும்.
 
பல கும்பல் வன்முறைக்கும் , சமயத்தில் உயிரிழப்புக்கும் காரணமான போலி செய்திகளுக்கு எதிராக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெரும்பாலும் குழந்தை கடத்தல்காரர்கள் குறித்த வதந்திகளை வாட்ஸ்ஆப் மூலமாகவும் பல்வேறு தளங்களிலும் பரப்பினர்.
 
இந்த வகையான போலி செய்திகள் எந்த அடிப்படையும் இல்லாமல் பல்வேறு அப்பாவிகளை கொன்று குவித்தன . இவ்வாறான பகிர்வுகள் ஒரு மணி நேரத்தில் பல்லாயிரக் கணக்கானவர்களை சென்று சேர்ந்தது. ஒரு கட்டத்தில் இது எவ்வாறு பரவியது என்பதை கண்டறிவதும் சாத்தியமற்று போனது.
 
கிராம புறங்களில் இத்தகைய போலி செய்திகளை நம்ப வேண்டாம் என விழிப்புணர்வு அளிக்க குழந்தை கடத்தல்காரர் என்று சந்தேகிக்கப்பட்டு தாக்கப்பட்ட ஒரு நபரையே அழைத்து அரசாங்க பணியில் அமர்த்தியுள்ளனர். கூட்டு வன்முறைகளை தடுக்க 2018ம் ஆண்டு அரசாங்க அதிகாரிகளே இந்த புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
 
சமூக ஊடகங்களில் தவறான செய்தி பரப்பப்பட்டதால் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஐம்பது கூட்டு கும்பல் வன்முறை சம்பவங்கள் தொடர்பான வழக்குகள் பதிவாகியுள்ளன. பேஸ்புக், யூ டியூப் , ஷேர் சாட் மற்றும் உள்ளூர் மொழியில் இயங்கும் பல புதிய ஊடகங்கள் மற்றும் செயலிகள் என பல்வேறு தளங்கள் இந்த குற்றங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
 
ஆனால் இந்த அனைத்து சமூக ஊடகங்களைவிட பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்ஆப் மிகவும் பிரபலம். உலகளாவிய அளவில் 150 கோடி பயனாளிகளைக் கொண்டுள்ள வாட்ஸ்ஆப் இந்தியாவில் 40 கோடி பயனாளிகளைக் கொண்டுள்ளது. இதில் தவறான தகவல்களைப் பரப்புவது பற்றிய விவாதங்கள் இந்தியாவை மையமாக வைத்தே பேசப்படுகிறது.
 
2018ஆம் ஆண்டில் வதந்திகளால் ஏற்பட்ட வன்முறைகளையம் அசம்பாவிதங்களை தவிர்க்க பொறுப்பற்ற மற்றும் பரபரப்பை ஊக்குவிக்கும் தவறான செய்திகளை கட்டுப்படுத்துமாறு வாட்ஸ்ஆப்பிடம் இந்திய அரசாங்கம் கேட்டுக்கொண்டது. ஒரே நேரத்தில் ஒரு குறுஞ்செய்தியை 5 பேருக்கு மட்டுமே பகிர முடியும், மேலும் அனுப்பப்படும் செய்திகளில் 'Forwarded' எனும் குறிச்சொல் வைப்பது என பல நடவடிக்கையை வாட்ஸ்ஆப் மேற்கொண்டது.
 
ஆனால் இது போதாது என அரசாங்கம் தெரிவித்தது. எனவே தற்போது சீனாவை போல செய்திகளைக் கண்காணிக்கும் தானியங்கி கருவிகளைப் வாட்ஸ்ஆப் பயன்படுத்த வேண்டும் என அரசாங்கம் எதிர்பார்கிறது. இதன் மூலம் குறிப்பிட்ட சில செய்திகளை உடனே நீக்க முடியும். போலி செய்தி அல்லது காணொளியை பகிரும் அந்த அனுப்புனரையும் வாட்ஸ்ஆப் நிறுவனம் கண்டுபிடித்து புகார் அளிக்க வேண்டும் என அரசாங்கம் விரும்புகிறது.
 
"விசாரணை முகமைகள், தேச துரோகம் மற்றும் ஆபாசப் பட விவகாரம் மற்றும் பிற குற்றங்களை கண்டுபிடிக்க சமூக ஊடகங்கள் அதன் தகவல்களை தரமுடியவில்லை என்றால் அவை நாட்டில் நுழைந்து தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்க முடியாது" என இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
 
"எனவே சமூக ஊடகங்க நிறுவனங்கள் எங்களை தடுக்க நீதிமன்றம் வரை சென்றுள்ளன" என அரசு அதிகாரி ஒருவர் அதிகாரப்பூர்வமற்ற முறையில் தெரிவித்தார்.
 
மேலும் சீனாவில் இணைய கண்காணிப்பு மிக தீவிரமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். அவர் கூறியது உண்மைதான்; சீனாவில் உள்ள வீ-சாட்டில் தடை செய்யப்பட்ட செய்திகளை பகிர்ந்தால் அந்த செய்தி மறைந்து போய்விடும்.
 
எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பயன்படுகிறது என வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவிக்கிறது.
 
விதிக்கப்பட்ட வரம்புகளால் தளத்தில் அனுப்பப்படும் ஃபார்வேர்ட் செய்திகளின் எண்ணிக்கை 25% குறைத்துள்ளது என செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
 
''பெரிய எண்ணிக்கையில் செய்திகளை அனுப்பும் நிறுவனங்கள் மற்றும் தானியங்கி செய்திகளாக ஃபார்வேர்ட் செய்த நிறுவனம் அல்லது தனி நபர் என ஒரு மாதத்திற்கு இரண்டு மில்லியன் கணக்குகளை தடை செய்கிறோம் எனவும் வாட்ஸ்ஆப் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். இது மட்டுமின்றி பல கோடி இந்தியர்களை சென்றடையும் ஒரு பெரிய பொது கல்வி பிரசாரத்தையும் வாட்ஸ்ஆப் நிறுவனம் நடத்துகிறது.
 
இதற்கிடையில் ஒரு செய்தியை அனுப்பும் உண்மையான நபரை கண்டுபிடிப்பதற்கான கோரிக்கைகளை அரசாங்கம் வைத்துள்ளதால் அந்தரங்க உரிமைக்கான செயல்பாட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
 
இதன் மூலம் வன்முறை மற்றும் இறப்புகளை ஏற்படுத்தும் செய்திகளைக் கண்டுபிடிக்க விரும்புவதாக அரசாங்கம் கூறுகிறது, ஆனால் இது விமர்சகர்களைக் கண்டுபிடிப்பதற்காகவும் பேச்சு சுதந்திரத்தை கட்டுப்படுத்தவும் எடுக்கப்பட்ட நடவடிக்கையாக இருக்குமோ என செயல்பாட்டாளர்கள் அஞ்சுகின்றனர்.
 
இந்த அச்சம் காரணமில்லாமல் வரவில்லை. கடந்த ஆகஸ்ட் மாதம் காஷ்மீரில் அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் மற்றும் அடுக்குமுறைகளை விமர்சிப்பவர்கள், பிரதமருக்கு எதிராக கடிதம் எழுதுபவர்கள் என சிலர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன் காரணமாகவே செயல்பாட்டாளர்கள் அஞ்சுகின்றனர்.
 
இந்திய அரசாங்கம் விரும்பும் கோரிக்கை இன்று சாத்தியமில்லை, அனுப்புனர் மற்றும் பெருநருக்கு மட்டுமே காண்பிக்கப்படும் செய்திகளை கொண்ட அமைப்பு இது, இதைத்தான் நாம் பயன்படுத்துகிறோம் என வாட்ஸ்ஆப்பின் உலகளாவிய தகவல் தொடர்புக்கான தலைவர் கார்ல் வூக் கூறியுள்ளார்.
 
அரசாங்கம் விடுக்கும் இந்த கோரிக்கைகள் வாட்ஸ்ஆப்பை மீண்டும் கட்டமைக்கும் நிலைக்கு எங்களை கொண்டு செல்லும் . இதனால் வேறு ஒரு தயாரிப்புதான் உருவாக்கப்படும். அது அடிப்படையில் தனிப்பட்டதாக தகவல் தொடர்பாக இருக்காது. நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு செய்தியும் உங்கள் தொலைபேசி எண்ணில் பதிவு செய்யப்பட்டால் என்னவாகும் என்று கற்பனை செய்து பாருங்கள். இது தனிப்பட்ட தகவல் தொடர்புகளுக்கான இடமாக இருக்காது.
 
2011ம் ஆண்டு முதல் இந்திய சட்டங்கள் அதன் இணைய தளங்களுக்கு சில பாதுகாப்பு முறையை அனுமதித்துள்ளது. ஒரு தொலைபேசி நிறுவனம் அதன் வாடிக்கையாளர்கள் , தொலைபேசி இணைப்புகளில் விவாதிக்கும் செய்திகளுக்கு பொறுப்பேற்க முடியாது; அதேபோல ஒரு நபர் மற்றொருவருக்கு அனுப்பும் மின்னஞ்சல்களின் உள்ளடக்கத்திற்கான மின்னஞ்சல் நிறுவனம் பொறுப்பேற்க முடியாது.
 
சமயத்தில் அதிகாரிகளின் தேவைக்கேற்ப தொலைபேசி பதிவுகளைப் பகிர்வது போன்றவை சட்டத்திற்கு உட்பட்டது. அது பாதுகாப்பானது. ஆனால் தற்போது புதிதாக முன்மொழியப்பட்ட விதிகள் அத்தகைய பாதுகாப்பான நிலைமையை மிகவும் கடுமையாக்கும்.
 
முன்மொழியப்பட்ட விதிகளுக்கு இணங்குவது உலகளவில் பல்வேறு நாடுகளுக்கு வெவ்வேறு பயன்பாட்டுமுறை என பராமரிப்பதில் சிரமங்கள் உண்டாகும். இது செயலியையும் அதன் தளங்களையும் பலவீனமடைய செய்யும். அது மட்டும் பிரச்சனை அல்ல.
 
இந்தியாவில் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான பயன்பாட்டாளர்கள் கொண்ட எந்தவொரு தளமாக இருந்தாலும் இந்தியாவில் அந்த நிறுவனம் அலுவலகம் அமைக்க வேண்டும் என வரைவு விதிகள் கோருகின்றன. ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் அந்நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும் என்பது இந்த விதியின் மூலம் வெளிப்படையாகத் தெரிகிறது.
 
தகவல் பரிமாற்றத்துக்கான எந்த ஒரு தளத்தையும் இந்திய தொழில்நுட்ப சட்டங்கள் விட்டுவைக்காத அளவு விரிவானதாக உள்ளது.
 
எனவே இது பிற தளங்களையும் பாதிக்கும். இந்த சட்டம் அமலுக்கு வந்தால் விக்கிபீடியா போன்ற தளங்களையும் மூட வேண்டி வரும்.
 
அதேபோல் இந்த விதிமுறைக்கு உட்படவில்லை என்றால் டெலிகிராம் போன்ற செயலிகளுக்கும் என்னவாகும் என்பது தெரியவில்லை.
 
எனவே இணைய சேவை வழங்குபவர்கள் அந்த செயலிகளை பயன்படுத்தாதபடி முடக்க நேரிடும்.
அந்தரங்க உரிமை செயற்பாட்டாளர்கள் கண்காணிக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், அரசாங்கம் இந்த செயலிகளை மூடுவதை காட்டிலும், இதற்கு ஒரு தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என்கின்றனர் பொது கொள்கையாளர்கள்.
 
ஆனால் பிறரை போலவே அவர்களாலும் எந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூற இயலவில்லை.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்