22 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசரின் காலடித் தடத்தைக் கண்டுபிடித்த சிறுமி

Webdunia
சனி, 30 ஜனவரி 2021 (08:48 IST)
பிரிட்டனில் நான்கு வயதுக் குழந்தை ஒன்று, கடற்கரையில் நல்ல நிலையில் உள்ள டைனோசரின் கால்தடத்தைக் கண்டுபிடித்துள்ள வியத்தகு சம்பவம் நடந்துள்ளது.
 
லிலி வில்டர் என்கிற அந்த குழந்தை, தெற்கு வேல்ஸ் பகுதியில் உள்ள பெண்ட்ரிக்ஸ் கடற்கரையில் டைனோசரின் கால் தடத்தை அடையாளம் கண்டுள்ளார். டைனோசர்கள் எப்படி நடந்தன என்பதை நிறுவ இது உதவும் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.
 
சுமார் 22 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசரின் இந்த கால்தடம் இத்தனை ஆண்டுகளாக ஈர மண்ணால் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது.
 
இந்த கால்தடம் 10 சென்டிமீட்டர் நீளம் கொண்டதாக இருக்கிறது. இதை 75 சென்டிமீட்டர் உயரம் கொண்ட டைனோசரின் கால்தடமாக இருக்கலாம், ஆனால் எந்த வகையான டைனோசர் எனக் கூறமுடியவில்லை.
 
"இதுவரை இந்தக் கடற்கரையில் கிடைத்த கால்தடங்களிலேயே இந்த கால்தடம் தான் மிகவும் சிறந்தது" என்கிறார் வேல்ஸில் இருக்கும் தேசிய அருங்காட்சியகத்தின், வரலாற்றுக்கு முந்தைய உயிரினங்களை ஆராயும் அறிஞர் சிண்டி ஹோவெல்ஸ்.
 
"லிலி மற்றும் அவரது தந்தை ரிச்சர்ட் தான் இந்த கால் தடத்தைக் கண்டுபிடித்தார்கள்." என்கிறார் லிலியின் தாய் சாலி.
 
"கடற்கரையில் நடந்து கொண்டிருந்த போது, அப்பா அங்கே பாருங்கள் என லிலி, டைனோசரின் தடத்தைப் பார்த்துக் கூறினாள். வீட்டுக்கு வந்த பின், தான் எடுத்த டைனோசரின் கால்தடப் படத்தை ரிச்சர்ட் காட்டினார். அது பிரமாதமாக இருந்தது.
 
அது ஒரு உண்மையான டைனோசரின் கால் தடத்தைப் போல மிக நன்றாக இருந்ததாக ரிச்சர்ட் நினைத்தார். நான் நிபுணர்களை தொடர்பு கொண்டேன். அதன் பிறகு அவர்கள் இது தொடர்பான ஆய்வை முன்னெடுத்துச் சென்றார்கள்."
 
கொய்லோஃபிசிஸ் ரக டைனோசரின் இதேபோன்ற கால்தடம் ஒன்று அமெரிக்காவில் சமீபத்தில் கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
கடந்த காலத்தில் பெண்டரிக்ஸ் கடற்கரையில் காணப்பட்ட கால்தட மாதிரிகள், டைனோசர்களைக் காட்டிலும் அதிகமாக முதலை வகையைச் சேர்ந்த ஊர்வனகளிலிருந்து வந்தவை எனக் கருதப்படுகிறது.
 
டைனோசரின் கால் தடத்தை சட்ட ரீதியாக நீக்கி, அதை கார்டிஃப்-ல் இருக்கும் தேசிய அருங்காட்சியகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு பாதுகாக்கப்பட, வேல்ஸின் தேசிய இயற்கை வளங்கள் துறையிடம் அனுமதி பெறப்பட வேண்டும்.
 
டைனோசர்கள் முதன்முதலில் சுமார் 230 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றின, அவற்றின் பரிணாம வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தின் மீது இந்த காலடித் தடம் வெளிச்சம் பாய்ச்சுகிறது.
 
"டைனோசரின் காலடித் தடத்தை சிறப்பாக பராமரிப்பதால், விஞ்ஞானிகள் டைனோசரின் காலின் உண்மையான வடிவத்தை நிறுவ உதவலாம்" என வேல்ஸ் தேசிய அருங்காட்சியகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்